Wednesday 18 June 2014

Story 14: கூத்தியா / சக்களத்தி

கூத்தியா / சக்களத்தி

செங்கோடன் 25 ஏக்கர் மிராசுதார், எப்போதும் அமைதியாக இருப்பார் தான் உண்டு தன் நிலம் உண்டு என்று இருப்பவர் தம்மிடம் வேலை செய்பவர்களையும் மரியாதையாக நடத்துவார். மனைவி, மகன், மகள் என்று அளவான குடும்பத்தை வளமாக வழிநடத்துபவர். இவர் எப்போது வண்டி கட்டி சென்றாலும் வீட்டில் யாரும் எங்க செல்கிறீர்கள், ஏன் செல்கிறீர்கள் என்று கேட்கமாட்டார்கள், கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்.

சக்களத்தி வீட்டுக்கு புறப்பட்டு விட்டாரப்பா செங்கோடன் என்று தான் சொல்வார்கள், ஆம் அவர்கள் சொல்வதும் உண்மை தான் செங்கோடனுக்கு பாப்பாத்தி என்றொரு சக்களத்தி உண்டு. எல்லோரும் அவளை அவரின் கூத்தியா என்று சொன்னாலும் இவர் மட்டும் எப்போதும் பாப்பாத்தையை விட்டுக் கொடுத்து பேசமாட்டார் பாசமழை பொழிவார் பாப்பாத்தி மீது.

அவருக்கும் அருக்காணிக்கும் திருமணம் நடந்தது ஒரு விபத்து என்றே சொல்லாம் திருவிழாவிற்கு ரங்கரகட்டை ஆட போனவர், தூரிக்கடையை சுற்றி சுற்றி வரும் அருக்காணி இவரைத்தான் பார்க்கிறாள் என்று அறிந்து தூரியோடு சேர்த்து அருக்காணியையும் சுற்ற ஆரம்பித்தார். இவர் சுத்துவதை பார்த்த கட்டிங்கடை குப்பன், செங்கோடனின் அப்பனிடம் தூபம் போட, பெரியவர் பட் என்று பேசி சட்டென்று குறித்தார் செங்கோடனுக்கு திருமண தேதியை.

ஆடு மேய்க்கும் பாப்பாத்தையை காதலித்து வந்த செங்கோடன் அவ்வப்போது அவளுடன் சோளக்காட்டில் ஒதுங்குவது உண்டு. சோளக்காடும், கிழக்கு தோட்டமும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி இங்கு பாப்பாத்தியோடு இவர் அடிக்கும், கும்மாளம் அவ்வப்போது பெரியவரின் காதுக்கு போகும் அதனாலேயே அருக்காணியிடம் திசை மாறுகிறார் என அறிந்ததும் கல்யாணத்தை குறித்துவிட்டார்.

கல்யாணம் அருக்காணியோடு இருந்தாலும் பாப்பாத்தியை மறக்க இயலவில்லை, பாப்பாத்தியோ உங்களோடவே இருந்துவிடுகிறேன் என கூற பூனாச்சி மேட்டுக்காட்டில் குடி வைத்தார் பாப்பாத்தியை. சம்பிரதாயத்துக்கு ஒலகடம் ஈஸ்வரன் கோயிலுக்கு அழைத்துப்போய் மாலையை மாற்றிவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்த 2 ஏக்கர் மேட்டாங்காட்டில் கல்லாக்காய் விதைத்து இருந்தார், இப்போது பாப்பாத்தையையும் விதைத்துவிட்டார்.

கூத்தியா என்று வெளியில் சொன்னாலும் அவர் எப்போதும் அவளை தன்னுடைய இன்னொரு தாரமாகத்தான் பார்த்து வந்தார். பெரிய குடும்பத்தில் சகஜம் என்பது போல அருக்காணியும் கண்டும், காணமல் இருந்தாள் காரணம் அவளை எந்த வித குறையுமின்றி பார்த்துவந்தார் என்பதால். சின்ன வீடு, பெரிய வீடு இரண்டுக்கும் 4 குழந்தைகள் ஆனது. எல்லோரையும் படிக்க வைத்தவர், சொத்தை மட்டும் பிரிக்காமல் விட்டு விட்டார்.

அருக்காணி குழந்தைகள் அவரைப்போலவே வாரி வழங்கும் வள்ளல்கள், பாப்பாத்தியும், குழந்தைகளும் முடிஞ்ச வரை கறக்கவே பார்ப்பார்கள், கறக்கவும் செய்வார்கள். ஊரறிய கண்ணாலம் செஞ்சிருந்தா எம்புள்ளைகளும், இன்னார் மகன் என்று தைரியமாக பேசுவார்கள், எல்லோரும் வேலைக்கு போவாங்க கடைசியில என் பொழப்பு இப்படி ஆகிப்போச்சே, என்று எப்போதும் புலம்புவாள். 

வயதாக வயதாக பாப்பாத்தி வீட்டுக்கு வருவது குறைந்ததும், பையன்களை கூட்டிக்கொண்டு அருக்காணி வீட்டு படியேறி என் மகன்களுக்கு என்ன செய்ய போறீங்க என்று நியாயம் கேட்டாள். பெரிய மனிதன் பெரிய மனிதனாகவே நடந்து கொண்டார். பூனாச்சி பள்ளத்தில் வாங்கிப்போட்டு இருந்த பத்து ஏக்கர் காட்டை பாப்பாத்தி பேரில் எழுதிய மனிதனுக்கு. சொத்திருந்ததும் சொந்த மகன்களிடம் மரியாதை இல்லை. அருக்காணி மட்டும் எப்போதும் எது கேட்டாலும் எந்நேரத்திலும் செய்ய தயாராக இருந்தாள்..

கயிற்று கட்டிலில் வீட்டு முன் நன்றாக சாணி போட்டு வழித்திருந்த களத்தில் நடுவில் தண்ணீரோடு தூங்கப்போனவருக்கு கை, கால்களை வழக்கம் போல் அமுத்தினாள் அருக்காணி. கட்டியவளையும், காதலித்தவளையும் மனைவியாக்கி கொண்டு சந்தோசமாகத்தான் இருந்தேன் கட்டியவள் காலம் முழுவதும் கள்ளானாலும் கணவன், புல்லாளானாலும் புருஷன் என்று இருக்கிறாய். காதலித்த பாவத்துக்கு மனைவியாக்கி ராணி போல வைத்திருந்தேன் ஆனால் அவள் சக்களத்தியாகத்தான் என்னோடு வாழ்ந்திருக்கிறாள் என்ற நினைவிலேயே கண் அசந்தார்.

No comments:

Post a Comment