Thursday 19 June 2014

Story 16: புரட்சி

புரட்சி:

ஒரு புரட்சிகரமான (உண்மையிலயே புரட்சி) கதை எழுத ரொம்ப நாள்  ஆசை, அதற்கு தலைப்பு வேறு வைத்தாகிவிட்டது "அன்றொரு நாள்" நன்றாக இருக்கிறது அல்லவா? ஆனால் கதை அதுதான் கிடைக்கவில்லை. எழுத்தாளர்களெல்லாம் எப்படி பக்கம் பக்கமாக எழுதித் தொலைக்கிறார்கள்? சுஜாதா சொன்னது போல் ஏன் எனக்கு மட்டும் அந்த அதிசயம் நிகழ மறுக்கிறது? ஒருவேளை எனக்கு படிப்பு போதவில்லையோ, இல்லையே சிறு வயதிலிருந்தே அதிகம் படிக்கும் வழக்கம் உள்ளவனாயிற்றே நான், காலஞ்சென்ற என் அம்மாயி (அம்மாவைப் பெற்ற அம்மா) பாப்பாயம்மாள் கூட ஒரு புஸ்தகத்தையும் ஒரு கிலோ மிச்சரையும் குடுத்துட்டா முடிக்காம கீழ வெக்கமாட்டான் கட்டீத்திண்ணி நாயி என்று அடிக்கடி கரித்துக்கொட்டுவாளே.

ஆக என்னால் முடியும், அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான வரலாறு சப்ஜெக்டில் ஒரு கதை எழுத வேண்டும், அதனால்தான் நான் புரட்சியை தேர்ந்தெடுத்தேன். புரட்சி என்ற மட்டில் நான் அறிந்தது சிப்பாய் கலகம் மற்றும் ஃபிரஞ்சுப் புரட்சி, ஃபிரான்சில் ஜெயிலை உடைத்து புரட்சி செய்தது குறித்தும் மங்கள் பாண்டே தோட்டாவை கடிக்க மறுத்தது குறித்தும் உணர்சிகரமாக எழுதி ஐந்து மதிப்பெண் வாங்கியதோடு சரி அது குறித்து மேற்கொண்டு என்னிடம் தகவலில்லை. உள்ளூர் புரட்சி குறித்து எழுதலாம் என்றால் எங்கள் ஊரில் புரட்சி ஏதும் நடந்ததாய் குறிப்புகளில்லை. ஒரே ஒரு முறை ஊர்த் தலைவருக்கும் அவரின் தம்பிக்கும் பெரும் தகராறு வெடித்தது, அது ஏதோ வைப்பாட்டித் தகராறு என்றார்கள். வைப்பாடித் தகராறு கூட இல்லை, யார் இரவு நேரத்தில் முதலில் செல்வது என்ற பிரச்சினையாம். அது புரட்சியில் சேர்த்தியில்லை. ஆக புரட்சிக்கு நான் எங்கு செல்வது?

சிறுகதைக்கென்ரு வடிவம் இல்லைதானே,சிறியதாயிருந்தால் சிறுகதை அவ்வளவே. இல்லை எழுதினால் அதில் மருத்துவமனை ஃபினாயில் வாடை வர வேண்டும், மூத்திர நாத்தம் அடிக்க வேண்டும். படிக்கும் போதே இரண்டு குடத்தை தயாராக வைத்துக்கொண்டு தலையில் எண்ணைப் பிசுக்கோடு கதை மாந்தர்கள் அலறிக்கொண்டே கண்ணீர்   வடிக்கையில் அதை பிடித்துக்கொள்ள வேண்டும். இதுதான் சிறுகதையின் இலக்கணமா? இல்லை பக்கம் பக்கமாய் சேரிகளையும் அருகில் ஓடும் சாக்கடையும் தேம்ஸ் நதியாய் பாவித்து என் கதையின் மூலம் சமுதாய சீர்திருத்தத்தை எங்கிருந்தாவது பிடுங்கி வர வேண்டுமாஇதயெல்லாம் விட புரட்சி என்ற மேலான சித்தாந்தத்தை நோக்கி எழுதத் துடிக்கும் நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்.

புரட்சியை தேந்தெடுக்க காரணம். புரட்சியின் ஊடே வாழ்வதென்பது எவ்வளவு நன்றாக இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எப்பொழுதும் பரபரப்பாகவும் எச்சரிக்கையாகவும், அனைவரையும் சந்தேகக்கண் கொண்டும், இதிலுள்ள த்ரில்லை கவனியுங்கள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆக என் வாழ்வில் நான் புரட்சியை சந்தித்தே ஆக வேண்டும். இல்லையில்லை நானே புரட்சியை உருவாக்க வேண்டும்.

நடைமுறை யதார்த்தத்தில் நான் எங்கு போய் புரட்சி செய்ய முடியும்? இவ்வுலகில், என் சொல் பேச்சு கேட்கும் ஒரே ஜீவனான என் மனைவியிடம் செய்வது முறையாக இருக்காது. பின்விளைவகள் மோசமாகி விடும். அலுவலகத்தில் வெளியிடங்களில் உம் ஹூம். அங்கெல்லாம் வன்முறையை தவிர்க்க இயலாது. கண்டக்டரிடம் மீதி சில்லறை கேட்கவே பலமுறை யோசித்து அவர் சிரித்த சமயமாய் பார்த்து சில்லறை கேட்கும் வழக்கமுள்ள நான் தனியாளாய் எப்படி போராடுவது? என்னை எதிர்த்தே ஒரு புரட்சி செய்தால் தான் உண்டு.

என் வாழ்வில் முன்பு நடந்த புரட்சி குறித்து எழுதினால் என்ன? நான் என்ன செய்துள்ளேன் அப்படி, அரசியல் அமைப்பு தொடங்கி இருபதாம் ஆண்டு அடி எடுத்து வைத்துள்ள ஒரு அரசியல் சண்டமாருதம் எங்கள் ஊருக்கு வந்து மைக் இல்லாமல் உரையாற்றிய போது அவர் அருகில் சிறுவனாகிய நான் நின்று கொண்டிருந்த ஒரு புகைப்படம் மறுநாள் செய்தித்தாள்களில் வெளியானது வெகு நாட்கள் அதை நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். கைபேசிஎல்லாம் அரிதான அக்காலத்தில் கருப்பாக ஏதோ ஒன்றை அவரின் சட்டைப்பையில் பார்த்தேன் அது கைபேசியா அல்லது கைத்துப்பாக்கியா என்கிற விவாதம் இன்றும் என் மண்டைக்குள் ஒடுகிறது. பிற்காலத்தில் அவர் பெரிய புரட்சிப் புயல் என்று அழைக்கப்படலானார். எவ்வாறாயினும் அவரின் ஆரம்ப காலத்தில் அருகில் நின்றுகொண்டிருந்த எனக்கும் அந்த புரட்சியின் நிழல் சிறிது படிந்திருக்கும் தானே.

பனிரெண்டாம் வகுப்பில் எங்கள் இயற்பியல் வாத்தியார் தான் சொல்லும் மொன்னை நகைச்சுவைகளுக்கெல்லாம் மாணவர்கள் சிரிக்க வேண்டும் என்று எண்ணுபவர். நம்புங்கள் சிரிக்காத மாணவனை எழுந்து நின்றெல்லாம் சிரிக்க சொல்லி சிரிப்பை பிடுங்குவார். வராத சிரிப்பை மாணவர்கள் கஷ்டப்பட்டு வழங்க வேண்டும், பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அங்கீகாரத்தை அதிகார துஷ்பிரோயகத்தின் மூலம் பறிப்பதும் சர்வாதிகாரம் தானே. எதிர்பார்த்த படியே  ஒருநாள் நான் சிரிக்காதபோது என்னை கவனித்து விட்டார், வழக்கம் போல் என்னை எழுந்து நின்று சிரிக்கப் பணித்தார். உம் ஹூம் அசரவில்லை நான் எள்ளளவும் வாயைத் திறக்கவில்லை. மாணவர்கள் ஆவலுடன் என்னையே பார்கின்றனர்.  சிரிப்பு வந்தால் சிரிக்கலாம் என்று அவர் என்னை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் சிரிக்கவில்லை. ஆஹா ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று அனைவரும் விழித்துக் கொண்டிருக்க ஆச்சர்யமாக ஒன்றும் சொல்லாமல் என்னை அமரச் சொல்லிவிட்டார். அன்று முதல் அவர் நகைச்சுவையின் பொருட்டு யாரையும் சிரிக்க வற்புறுத்தவில்லை.

இதுவும் ஒரு சிறு புரட்சிதானே.புரட்சியில் ஏது அளவு? புரட்சி எல்லோர் வாழ்விலும் உள்ளது.


No comments:

Post a Comment