Thursday 26 June 2014

Story 31:ஒரிக்கூடு



(ஒரிக்கூடு - நெல்லுச்சோறு)


நான்லாம் ஆறுமுகம் இப்பிடி ஆவான்னு நெனச்சுக் கூடப் பாக்குல, எப்பிடி இருந்த பய? எவ்வளவு அராத்து வேல பாத்தவன் இன்னிக்கி இம்புட்டு பெரிய ஆளு ஆய்டானா?
அவன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்குள்ள வந்ததப் பாத்துருக்கனுமே. அப்பப்பா, சக்கரம் வச்ச பொட்டிய உருட்டிக்கிட்டு கருப்பு கண்ணாடி போட்டுக்குட்டு ஏதோ வெளிநாட்டு ஆளு மாதிரி.

 மாரியம்மன்  கோவிலுக்கு எதுத்தாப்ல நம்ம சுப்பண்னன் தாத்தா வீடு, பாவம் ரெண்டு காதும் டமாரம் அவருக்கு. செவுட்டு மெஷின் வச்சிருக்காரு, ஊருக்குள்ள புதுசா வர்ற யாரும் இவருகிட்ட இருந்து தப்ப முடியாது. இம்புட்டு பவுசா யாரோ புதுசா வர்றதப் பாத்து ஆளு மெரண்டுட்டாரு. கண்ணு ரெண்டையும் சுருக்கி பாத்து, அய்யாவு ஆருன்னு தெரியலையேனு கத்துனாரு,செவுட்டு மெஷின் இருக்கறதால கத்திதான் பேசுவாரு தன்ன மாதிரியே இங்க யாருக்கும் காது கேக்காதுன்னு நெனப்பு. நான்தான்யா ஒரிக்கூடு ஆறுமுகம்னு நம்மாளு பொட்டிய உருட்டிகிட்டே அவருகிட்ட வந்தான், அவருனால நம்பவே முடியல, ஒரிக்கூட்டான் இம்புட்டு பெரிய ஆளாயிட்டான்னு. உடனடியா அவரு சம்சாரத்துகிட்ட சொல்லி வரக்காப்பி குடுக்க சொல்லி அவனுக்கு முதல் மரியாத செஞ்ச ஆளுக பட்டியல்ல மொதல்ல வந்துட்டாரு. நாளப் பின்ன நல்லதோ கெட்டதோ  மறக்காம எதாச்சும் நம்மளுக்கு பண்ணுவான்லனு நெனச்சுக்கிட்டாறு.

ஒரிக்கூட்டான் எங்ககூடத் தான் படிச்சான். ரொம்ப ஏழைக் குடும்பம். நாங்கெல்லாம் மதியத்துக்கு நெல்லுச்சோறு தூக்குபோசில எடுத்துட்டு வந்தா அவன்மட்டும் கம்மஞ்சோறு எடுத்துட்டு வருவான். தொட்டுக்க கடலை சட்னி, இதான் தெனமும்.நாங்க சாப்பட்ரதவே பாத்த்துகிட்டு இருப்பான் ஆனா எதுவும் கேக்கமாட்டான், நாங்களும் அவன் கேக்கறவரைக்கும் குடுக்கவே கூடாதுன்னு நெனச்சிட்டு கம்முனு இருப்போம். அமுக்குனிப் பய கடைசிவரைக்கும் கேக்கமாட்டான்.

 ஆனா எப்பிடி எங்ககிட்டு இருந்து வாங்கறதுன்னு அவனுக்கு நல்லா தெரியும். அது அவனோட கதை சொல்ற திறம, அவன் சொல்ற கதைல  பக்கத்துக்கு பக்கம் அரக்கனுக வந்து அழகான பொண்ணுங்கள தூக்கிட்டு போவானுக, குகைல கொண்டு போய் வெச்சுக்குவானுக உள்ள இருந்து சத்தம் மட்டும் வரும். இதச் சொல்லி முடிச்சு மேற்கொண்டு எதுவும் பேசாம  நிப்பாட்டுவான், நாமளா புரிஞ்சுகிட்டு சோத்த எடுத்து அவனுக்கு வெச்சரனும். அப்போதான் சொச்சத்தையும் சொல்லுவான். நல்லா பெசஞ்சு கை நெறையா எடுத்து சாப்டுவான். அப்புடி ஒரு வேகம் சாப்பாட்டுல. ஒருத்தன் எவ்ளோ வேகமா சாப்பட்ரானோ அதே மாதிரிதான் அவன் வேலையும் படிப்பும் இருக்கும்னு எங்க தாத்தன் அடிக்கடி சொல்லுவாரு. நானும் அதுக்காக வேகமா சாப்டுட்டு படிப்பு எதுவும் நல்லா வருதானு பாத்தேன், அப்டி எதுவும் நடக்கல. அதேமாதிரி படிப்புக்கும் ஒரிக்கூட்டானுக்கும் ஏணி என்ன படிக்கட்டே கட்டுனாலும் ஏறி மேல போக முடியாது அவனால. ஒரிக்கூட்டான் அடிக்கடி சொல்லுவான் . மூணு வேலையும் நெல்லுச்சோறு இதான் அவன் கனவு, ஆச எல்லாம்.

இது இப்போ ரொம்ப ஆச்சர்யமா இருக்கலாம் ஆனா நெல்லுச்சோறுங்கிறது உண்மையிலயே அப்போ ஒரு ஆடம்பரந்தான். ஒரிக்கூட்டானோட அப்பா பெரிய ஒரிக்கூடு நெல்லுச்சோத்துக்கும் கோழிக்கொழம்புக்கும் மயங்கி அவரோட நாலு ஏக்ரா நெலத்தையே சொட்டக்காள குடும்பத்துக்கு எழுதி வெச்சவரு. அப்போ இருந்து அந்த   குடும்பத்துக்கு ஒரிக்கூட்டானுகனு பேரு வந்துருச்சு. அவர ஏமாத்தி சோத்த போட்டு சொத்த புடிங்கிட்டீங்களே நீங்கெல்லாம் உருப்படவே மாட்டீங்கன்னு பெரிய ஒரிக்கூடு சம்சாரம் சொட்டக்காளயோட அம்மாகிட்ட ரொம்பதடவ வம்பு பண்ணுச்சு.அப்போ பொம்பள சோக்க விடவும் அபூர்வமா இருந்துருக்கு நெல்லுச்சோறு.

   நல்லா ஞாபகம் இருக்கு ஆறாவது படிக்கும் போது நடந்தது. ஈஸ்வரி டீச்சர்னா எங்க எல்லாத்துக்கும் பயம், கணக்கு டீச்சர் வேற. தப்பு பண்ணுனா பயங்கரமா அடிப்பாங்க. கணக்கு விசயத்துல கூட விட்ருவாங்க, ஆனா ஒழுக்க விசயத்துல மாட்னோம் செத்தோம். ஒரிக்கூட்டானுக்கு அவன் பேர இங்கிலீஷ்ல எழுத வராது, அப்போ நான்தான் இங்கிலீஷ்ல டாப்பு. டிக்டேசன்ல அஞ்சுக்கு அஞ்சு வாங்குவேன், இங்கிலீஷ் பரிச்சைல அவன் பேர எழுதறதுக்கு ஜாமின்ரி பாக்சுக்கு அடில எழுதி குடுத்துருந்தேன், அதப்பாத்து எழுதும் போது மாட்டிகிட்டான், அதோட இல்லாம என்னையும் மாட்டி விட்டுட்டான். ரெண்டு பேருக்கும் நல்லா அடி விழுந்துச்சு. வகுப்பவே சுத்தி சுத்தி வந்து அடி வாங்குனான் ஒரிக்கூடு எல்லாரும் சிரிச்சாங்க. என்ன இருந்தாலும் அவனோட  கற்பனை வளம் எங்களுக்கெல்லாம் வரவே வராது, அதனாலயே அவனுக்கு நெல்லுச்சோறு குடுத்து நான் என் கூட்டாளியாக்கிகிட்டேன்.

ஒருதடவ ஆட்காட்டி வெரலயும் நடுவெரலயும் மொனைல வளச்சு டூ விட்ற மாதிரி செஞ்சு காமிச்சான் ஏதோ வட்டமா சின்ன ஓட்ட மாதிரி வந்துச்சு, இதாண்டா பொம்பளக குஞ்சுன்னு சொன்னான் எனக்கு குறுகுறுன்னும் நம்ப முடியாத மாதிரியும் இருந்துச்சு. அதோட விடாம எங்க வகுப்புல இருந்த செல்விங்கிற பொண்ணுகிட்ட ஏய் செல்வி செல்வி இது என்னான்னு கேக்க அவ முழிக்கறதப் பாத்து பயங்கரமா சிரிச்சான்.இதயெல்லாம் எங்க பின் பக்கத்துல இருந்து கேட்டுகிட்டு இருந்த கிளாஸ் லீடர் மணி நேராப் போயி ஈஸ்வரிகிட்ட போட்டுக்குடுத்துட்டான். இதுக்கு ரெண்டு பேருக்கும் அடியும் குடுத்து வீட்டுல இருந்து ஆளையும் வரச் சொல்லிட்டாங்க. இதயெல்லாம் மனசுல வெச்சு ஒரு நாளக்கி ஈஸ்வரிய பழி வாங்குவேன்னு சொன்னான் ஒரிக்கூடு. சொன்ன மாதிரி ரொம்ப வருஷம் கழிச்சு அத செஞ்சும் புட்டான் பாவி.

பத்தாவது அரப் பரீட்சையப்ப எங்க அறைக்கு பழைய டீச்சரான ஈஸ்வரி டீச்சர் அறை கண்காணிப்பாளரா வந்தாங்க. வந்த உடனே மொத வேலையா ஒரிக்கூட்ட எழுப்பிவிட்டு அவன் டவுசர் சட்ட பாக்கெட், அவன் பரீட்சை அட்ட எல்லாத்தையும் செக் பண்ணுவாங்க. ஆறாவதுலயே பிட் அடிச்சவன் நீயுன்னு வேற சொல்லிக் காமிப்பாங்க. எல்லாரும் சிரிப்பாங்க. அன்னிக்கி எங்களுக்கு அறிவியல் பரீட்சை வழக்கம் போல வந்த ஈஸ்வரி டீச்சர் ஒரிக்கூட்ட எழுப்பி விட்டாங்க, அன்னிக்கின்னு பாத்து ரொம்ப பெருசா சட்ட போட்ருந்தான் அவன், சட்ட பாக்கெட்ட தேடிட்டு டவுசர் பாக்கெட்டுக்குள்ள கையவிட்டாங்க டீச்சர், அப்புடியே விட்ட வேகத்துல கைய எடுத்துட்டு ஓங்கி அவன் கன்னத்துல அடிச்சுட்டு கோவமா வெளிய போய்டாங்க. அன்னிக்கி பரீட்சை முடிஞ்ச உடனே ஒரிக்கூடு ஹெட்மாஷ்டரப் போய் பாத்துட்டு வந்தான். 11வதுல இருந்து அவன வேற பள்ளிக்கூடம் பாத்துக்க சொல்லிட்டாங்க. சாயந்தரமா தான் நான் என்னாச்சுடானு போய் கேக்க முடிஞ்சுது. அவன் என்ன பண்ணிருக்கான் அவன் டவுசர்ல உள் பாக்கெட்ட கத்திரியால வெட்டிட்டான். இப்போ வெளில இருந்து கைய விட்ட உள்ள எதுவும் தடையிருக்காது, கை நேரா குஞ்சுக்கு போயிரும். இதான் ஈஸ்வரிக்கு நடந்திருக்கு. நான் அவளுக்காக எழுப்பி வேற விட்ருந்தண்டானு வெக்கமில்லாமச் சிரிச்சவன்.

பக்கத்து ஊர்லயெல்லாம் போய் படிக்க வழியோ தேவையோ இல்லாம வேடசந்தூர்ல ஒரு மருந்து கடக்கி வேலக்கி போய்ட்டான். அதுக்கப்புறம் அவனப் பத்தி தகவல் எதுவும் இல்ல. யாரோ ஒரு நரசியக் (நர்ஸ்) கல்யாணம் பண்ணிகிட்டான்னு எங்கம்மாயி ஒரு தடவ சொல்லுச்சு. அந்த பொம்பள குறுக்குத்தடி (கிறிஸ்துவர்) ஆளுகன்னும் சொல்லுச்சு.

இப்போ கிட்டத்தட்ட 12 வருசத்துக்கப்புறம் இந்தா இப்பதான் ஊருக்கு வர்றான், அவன் பொண்டாட்டிய கூட்டிட்டு வரல. அவங்கம்மாவப் பாக்க வந்துருக்கான். அதுக்கு இப்போ கொஞ்சம் முடியல. இழுத்துகிட்டு கெடக்கு. எப்படியும் போயிரும், அமாவாசை தாண்டாதுனு பூசாரி குறி சொல்லிருந்தான். மதியமா சாப்டுட்டு அவனப் பாக்க போயிருந்தேன், தொட்டில தண்ணிய மோந்து மோந்து ஊத்திக் குளிச்சுகிட்டு இருந்தான். போன உடனே,

வாடா  உன்னதாண்டா நெனச்சுகிட்டு இருந்தேன், எப்படி இருக்க? சாயம்மா (அப்பாவை பெற்ற அம்மா) ஐயனெல்லாம் நல்லாருக்காங்களா?

எல்லாரும் நல்லாருக்காங்கடா நீ எப்புடி இருக்க, உன் சம்சாரம், வேலையெல்லாம் பரவாயில்லையானு கேட்டேன். அப்பொழுதுதான் அவன் இடுப்பின் ஓரம் பெரிய தையல் தழும்பு இருப்பதைக் கண்டு என்னடா ஆச்சுன்னனேன். அதுவா மாமியாருக்கு ரெண்டு கிட்னியும் போச்சு, சரி கழுத நம்மகிட்டத்தான் ரெண்டு கெடக்கேன்னு ஒன்னக் குடுத்துட்டண்டானு யதார்த்தமா சொன்னான். நான் எச்சி முழுங்கிக்கிட்டே உன் சம்சாரத்தக் குடுக்க சொல்ல வேண்டியதுதான்னு கேட்டேன், அது எதுவோ என் ரத்தம்தான் சரியா வருதாமா அதான் கேட்டாங்க குடுத்துட்டண்டா, அதுக்காகத்தான் எனக்கும் மேரிக்கும் (அவன் மனைவி) கல்யாணமே ஆச்சுரா, இல்லைனா எவன் எனக்கு  பொண்ணு குடுக்கறான் இந்த ஊருக்குள்ள சொல்லு. ஆனா ஒண்ணுடா இப்பெல்லாம் மூணு வேலையும் நெல்லுச்சோறு தான் பாத்துக்க, கத கூட சொல்லத் தேவையில்லன்னு சொல்லி லேசாச் சிரிச்சான் எங்கிட்ட.

எனக்கென்னமோ அவன் அழுத மாதிரிதான் இருந்துச்சு.

No comments:

Post a Comment