Saturday 28 June 2014

Story 34: தீர்ப்பாயிற்று



தீர்ப்பாயிற்று
 "கொன்றது மணி தான்....அது சந்தேகமில்லாமல் நிரூபித்தாயிற்று. இனி அவரை சட்டம் பார்த்துக்கொள்ளும்!"
 ஒருவன் பரப்பரப்பான அந்த வீதியில் நடந்துக்கொண்டிருந்தான். ஒரு வித அவசரமும் அவனிடம் தெரிந்தது. தெருவின் இடது பக்கம் இருந்த வீட்டின் கேட்டை திறந்தான். காலிங் பெல் சத்தம். கதவு திறந்தது.
 "யாரு நீங்க?", கதவை திறந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி வினவினாள்.
"மணி", அவன் பதிலளித்தான்.
"மணின்னா?"
"உங்க ஹஸ்பண்டுக்கு தெரியும்."
"என்ன விஷயமா அவர பாக்கணும்?"
"அது அவர் கிட்ட தான் சொல்ல முடியும். அவர் இல்லையா?"
"இல்ல...வெளியூர் போயிருக்காரு. வர ரெண்டு நாள் ஆகும்?"
"எந்த ஊரு?"
"பெங்களூர்!"
 பேருந்தில் பிரயாணம் செய்வது மணிக்கு பிடிக்காத ஒன்று. ஒரே நாளில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும். பஸ்சு தான் சிறந்த வழி என்று அவனுக்கு பட்டதால் ஒரு வோல்வோ பஸ்ஸில் சாய்ந்த படியும் இல்லாமல் படுத்த படியும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாய் செமி ஸ்லீப்பரில் பயணித்தான். பயணம் முழுதும் கார்த்தியிடம் என்ன பேசுவது என்கிற எண்ண ஓட்டம் மட்டும் தான் அவனுக்கு!

"மணி தன் அக்கா மகள் உமாவின் மேல் இருந்த கண்மூடித்தனமான காதலால் உமாவின் கணவனையே கொன்று விட்டான். உமாவும் அவள் கணவன் மூர்த்தியும் ஹனிமூனுக்காக பெங்களூர் சென்ற போது மணியும் அங்கே எதேச்சையாய் வருவதை போல பாவலா செய்து மூர்த்தி தனியாய் இருக்கும் சமயம் பார்த்து அவனை கத்தியால் குத்தி கொன்றிருக்கிறான்!"
 பெங்களூர் வந்து சேர்ந்தது வோல்வோ. மணி இறங்கி கார்த்தி இருக்கும் விலாசத்தை நோக்கி ஆட்டோவில் புறப்பட்டான். கார்த்தி ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருப்பதாக அவன் மனைவி கூறி இருந்தாள். ஹோட்டேளுக்குள் விசாரித்தான். கார்த்திக்குக்கு நேரம் நன்றாய் இருந்தது, அவன் அங்கும் இல்லை. எங்கோ வெளியே சென்றிருந்தான். 'இன்றே அவனை சந்தித்தாக வேண்டும். இன்றே! இல்லையேல் விபரிதம் ஆகிவிடும். இன்றைய ஒரு நாளை விட்டுவிட்டால் பின் வாழ்க்கை முழுதும் மணி தீரா கலங்கத்தொடு வாழ்ந்தாக வேண்டும். '
 மணி வெளியே வேகமாய் நடந்தான். பொட்டிக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்தான். அவனிடம் இருக்கும் ஒரே கேட்ட பழக்கம் அது தான். விட விட விடாமால் துரத்தும் பழக்கம். யோசித்தான். எங்கென்று தேடுவது. நகரம் முழுதும் தேடி அலைந்தாலும் ஒரே நாளில் தேடி அவனை தடுப்பதென்பது சாத்தியப்படாது. யோசனை தீவிரமானது, இரண்டாம் சிகரட்டை விழுங்கினான் என்கிற குற்ற உணர்வுமின்றி.
 "யாரு அம்மா நம்ம ஆத்து கல்யாண வேலை எல்லாம் எடுத்து போட்டு செய்வா?"
"ஏன் கவலை படறீங்க? நான் பண்றேன்."
"வேணாம் மணி. அது சரியா வராது. அது நன்னாவும் இருக்காது."
"ஆமாம் மணி. அம்மா சொல்றது கரெக்ட். நாங்க வேற ஆள் கிட்ட பொறுப்ப குடுக்கறது தான் எல்லாத்துக்கும் நல்லதுன்னு படறது."
"அட இதுல என்ன இருக்கு உமா. எனக்கு யாரு மேலயும் ஒரு கோவமும் இல்ல . அட்லீஸ்ட் நான் அத ப்ரூவ் பண்ண இத ஒரு சான்ஸா எடுத்துக்குறேனே!"

பெங்களூர் வந்திருக்கிறான். அதுவும் ரெண்டு நாட்களுக்கு மட்டும். இங்கே கலை அல்லது இலக்கியம் சம்பந்தப்பட்ட எதாவது மாநாட்டுக்காக இருக்க வேண்டும். பெட்டிக்கடையில் தி ஹிந்து வாங்கினான். அசவுகரியமாக பக்கங்களை புரட்டினான். ஒன்றும் கண்ணில் தென்ப்படவில்லை. வேறு ஒரு ஆங்கில நாளிதழ் வாங்கி பார்த்தான். அதில் அவன் பார்த்த சில நிகழ்ச்சி விவரங்கள் கார்த்தி அங்கே இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதை போல ஒரு உணர்வை அவனுக்கு தந்தது. விரைந்தான்.
 அவன் சென்ற முதல் இடம். ஒரு கல்லூரி. அங்கே நடக்கும் கலை நிகழ்சிகளில் அவன் பங்கேற்க கூடும். சென்று விசாரித்தான். அவர்களுக்கு அப்படி ஒரு ஆள் வருவதாய் தகவல் இல்லை. மணி சோர்வடைந்தான், மனதளவில்.
 "உமா, எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசையா இருக்கு. உனக்கு இஷ்டமா?"
"இல்ல, சொந்ததுக்குல்லையே கல்யாணம் பண்ணா பொறக்க போற கொழந்தைக்கு பிரச்சனை வரும்ன்னு....."
"அது எப்பவுமே அப்படி ஆகாது உமா. எனக்கு தெரிஞ்சு அப்படி கல்யாணம் பண்ணிக்கரவா எல்லாரும் சந்தோஷமா ஆத்மா திருப்தியோட தான் இருக்கா."
"இருந்தாலும் மணி, பெரியவா ஒத்துக்கணமே...."
"அல்ரைட். நான் அவா எல்லார்க்கிட்டையும் கேட்டு பாக்குறேன்."
 ஒரு நூலகத்தின் வைர விழா. சிறப்புரை : நீலகண்டன், சீனா, அவினாஷ், கார்த்திக், சுஹா. சுஹா, கார்த்திக்...கார்த்திக்! பிடித்துவிட்டான். மணியின் கண்கள் மணி மணியாய் மின்னியது. அவன் இருக்கும் இடத்தை அறிந்தாயிற்று. இனி என்ன? எப்படியேனும் அவனை பார்த்து பேச வேண்டும். நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. எங்கே அவன்...இன்னும் காணவில்லையே! எங்கே சென்றான் வீண் பழி சுமத்தும் பாதகன். நிகழ்ச்சி துவங்கி பத்து நிமிடங்களுக்கு பின் மெதுவாய் உள்ளே நுழைந்தான் கார்த்தி. மணி அவனை கண்க்கொட்டாமல் பார்த்தான். அப்படியே அவனை தள்ளி ஒரு அறையில் அடைத்து பேசி விடலாமா என்று ஒரு சிந்தனை வர கூட்டம், கைதட்டல் அவனை அந்த முடிவில் இருந்து விலகி நிற்க செய்தது. 'வந்தாச்சு. பார்த்தாச்சு. இன்னும் கொஞ்சம் நேரம் தான், இங்கிருந்து கண்டிப்பா அவன் என்ன தாண்டி போக முடியாது.'
 "கொலை நடந்த அன்று மணி உமாவும் மூர்த்தியும் தங்கி இருந்த அறைக்கு சென்றிந்தான். அங்கே அவனுக்கும் மூர்த்திக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. கோவத்தில் மூர்த்தியை மணி மூர்க்கத்தனமாக கத்தியால் குத்தினான். மணியின் ரேகைகள் அறையின் கதவில் கிடைத்தது. கத்தியில் எந்த ரேகையும் இல்லாததால் கத்தியை உபயோகிக்கும்போது மணி க்ளவுஸ் அணிந்திருக்க வேண்டும். சம்பவங்களையும் காரணங்களையும் பார்க்கும் போது மணியை தவிர வேறெங்கும் சந்தேகத்தை திருப்ப முடியவில்லை."
 நிகழ்ச்சி முடியும் வரை பொறுத்தான். கோவம் உள்ளே பொங்கும் போது பொறுமை மிக பெரும் சாபம். தேசிய கீதம் பாடும் போது அவனுள் என்றும் உணராத ஒரு ஆனந்தம் பிறந்தது. தேசிய கீதம் முடிந்து எல்லோரும் கிளம்பும் போது கார்த்தியை சரியாய் கவனிக்க முடியவில்லை. அவன் எத்திசையில் சென்றான் என்பதை அறிய கொஞ்சம் சிரமமாக இருந்தது. கால்கள் அவன் செல்லும் திசையை நோக்கி கண்மூடித்தனமாக சென்றதில் பலரை இடித்து, தள்ளி, விழுந்து, ஓடி கடைசியில் கார்த்தி சென்ற காரை கண்ணில் பார்த்தான்.
 காரை துரத்தி ஓடினான். அவன் ஓட்டத்தின் வெறியை அவனாலேயே நம்ப இயலாத ஒன்றாய் இருந்தது. காரை ஓடி பிடிப்பது அசந்தர்ப்பான ஒன்றே என்றாலும் எப்படியேனும் பிடித்துவிட்டால்...ம்ம்ம் இது அவன் வாழ்வு அவன் பிரச்சனை. அவன் ஓடி தான் ஆக வேண்டும். சிறிது தூரம் ஓடிய பின் அவனுக்கு மூச்சிரைத்தது. இருநூறு அடி தள்ளி கார்த்தி சென்ற கார் ஒரு சிக்னலில் நின்றதை கவனித்தான். விரைந்தான். கார் கிளம்பியது. தாவி கார் கதவில் மோதி திறந்தான்.
 "யே யாருப்பா நீ? இப்படி அத்து மீறி உள்ளே நுழையிற?"
"நான் தான் மணி!"
"எந்த மணி?"
"அறையில் ஒரு மரணம்ன்னு ஒரு கதை எழுதுறீங்களே...அதுல வர மணி!"
"உமாவோட மாமா?"
"ஆமா."
 கார்த்தி ஒன்றும் பேசவில்லை.
 "எதுக்காக நான் தான் மூர்த்திய கொன்னதா எழுதுறீங்க? நான் உமாவ எவ்வளவு நேசிச்சென்ன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கும் போது நான் ஏன் அவ ஹஸ்பண்ட கொல்ல  போறேன்?"
 "உன் அதிக படியான நேசமே அத செய்ய வெச்சிருக்கலாம்ன்னு தோனுச்சி. அதான் அப்படி எழுதுனேன்."
 "இது அபத்தம். நான் அத செஞ்சென்றதுக்கு போதுமான ஆதாரம் இல்லைன்னு ஒத்துக்குறீங்களா?"
 "ஆதாரம் இல்லைன்றதால நீ கொல்லலன்னு ஆயிடாது. நீ நான் உருவாக்குனவன். உன்ன எப்படி எங்க மாட்ட வெக்கனம்ன்னு எனக்கு தெரியும். நீ செஞ்சிருப்பேன்றதுக்கு உண்டான எல்லா கட்டமைப்பும் சரியா இருக்கு."
 "இருந்தாலும் நீங்க ஒரு திருப்புமுனைக்காக தான் என்ன கொலைக்காரனா சிக்க வெச்சுடீங்க. தயவு செஞ்சு மாத்துங்க."
 "ப்ரூபுக்கு அனுப்பிட்டேன். இன்னும் கொஞ்சம் நேரத்துல பிரசுரம் ஆயிடும். இனிமேல் எதையும் மாத்த முடியாது."
 "நீங்க செஞ்சது அந்நியாயம். நான் கொல்லல! நான் கொல்லல!  தயவு செஞ்சு மாத்துங்க."
 கார்த்தி அதன் பின் மணியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. மணி தேம்பியபடி காரில் இருந்து இறங்கி கொண்டு "அறையில் ஒரு மரணம்" தொடர் கதையில் புகுந்து கொண்டான்.
மணி கதையோடு ஒன்றிய பின் சுஜாதா(மன்னிக்கவும்) கார்த்தி தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
இரு தினங்களுக்கு பின் நகரத்தின் பிரசித்தி பெற்ற ஒரு புத்தக கடையின் முன்னே தொங்கி கொண்டிருந்த A3 சைஸ் விளம்பர பேப்பரில் இவ்வாறாக அச்சாகி இருந்தது
" 'அறையில் ஒரு மரணம்'  தொடர்க்கதையின் கடைசி பகுதி இன்றைய இதழில். பரப்பரப்பான விற்பனையில்
குமுதம்!" 

No comments:

Post a Comment