Thursday 3 July 2014

Story 44: ஒரு நட்சத்திரம். . என் பாட்டி. . .

ஒரு நட்சத்திரம். . என் பாட்டி. . .

“108, 10..9, 110, 1..1..1, 1..12   டாடி நேத்தோட இன்னைக்கு tweleve ஸ்டார்ஸ் அதிகமா எண்ணியிருக்கேன்
அருண்..டாடினு கூப்பிடக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல
சாரிப்பா
சரி எத்தனை ஸ்டார்ஸ் அதிகமா எண்ணுன
“twelve ஸ்டார்ஸ்ப்பாஅப்ப நாளைக்கு மிஸ் என்னை திட்ட மாட்டாங்கல
நேத்தோட இன்னைக்கு அதிகமாத்தான எண்ணி இருக்க..கண்டிப்பா திட்ட மாட்டாங்க..படுத்துத் தூங்கு
என் மகன் என்னை டாடி என்று கூப்பிடும் போது எனது கோபம் இரண்டு படிகள் மேலேறி விடுகிறது.நான் என் அப்பாவை டாடி என்று கூப்பிடும் பழக்கம் கிடையாது. பின் இவனுக்கு எப்படி இந்தப் பழக்கம் வந்தது.அப்பா அம்மா போன்ற உறவுகள் இக்கால குழந்தைகளுக்கு வெரும் உறவுகளாக மட்டுமே சொல்லித் தரப்படுகின்றன.ஆனால் உண்மையில் அவை உறவுகள் அல்ல உணர்வுகள். உறவுகளை ஒதுக்கி வைத்துவிடலாம். உணர்வுகளை எப்படி ஒதுக்குவது. அப்பா என்றோ அம்மா என்றோ அழைக்கும் போதே அது நெஞ்சில் இருக்கும் இரத்தத்துடன் கலக்க வேண்டும்.டாடி என்பது கண்டிப்பாக என் இரத்தத்துடன் கலக்கவில்லை.நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் எனது தோழன் ஒருவன் தனது தந்தையை டாடி என்று அழைத்தான். எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது தெரிகிறது, பெற்றோர்களின் மீதான பிள்ளைகளின் பாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறுக்க உதவும் கூர் மிகுந்த ஆயுதம் இந்த வேற்று மொழி கலாச்சாரம்.
ஆனால் என் மகனிடம் சாரியையோ,ஸ்டார்ஸையோ மாற்றி தமிழில் சொல்ல வைக்க என்னால் முடியவில்லை. அந்த கட்டத்தைத் தாண்டி நெடுந்தூரம் வந்துவிட்டது நமது பயணம். இதற்கு மேல் அவனுக்குள் தமிழைக் கட்டாயப்படுத்தி உட்செழுத்தினால் அவன் படப் போகும் அவமானங்களின் பாரம் என் மேல் தான் விழும். தமிழ் வழிக் கல்வி பள்ளியில் படித்து விட்டு,சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது நான் பட்ட அவமானங்களின் பாரமே இன்னும் நெஞ்சுக்குள் பச்சை பசேலென்று கிடக்கிறது. இதில் இன்னொன்றை தாங்கக் கூடிய சக்தியை கடவுள் நிச்சயம் எனக்குத் தர மாட்டார். எனது மகன் சொல்லும் அப்பா,அம்மாவிலேயே நான் முழுத் தமிழையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள்கிறேன்.
அருண் தூங்கிவிட்டான். நிலவின் ஒளி வெள்ளம் என் மகனையும் அணைத்துக் கொண்டு ஓடுகிறது. என்னையும் கூட. இப்போது நான் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன்.என் மகன் விழித்திருக்கும் போதே எண்ணி இருக்கலாம். ஆனால் எனதுமிஸ்ஸிடம் திட்டு வாங்குவதற்கு பயந்து தான் நான் எண்ணுகிறேன் என்று அவன் தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது. என்னுடைய மதிப்பு அவனிடம் எப்போதும் குறையக் கூடாது.ஏனென்றால் ஒரு குழந்தையை வளர்ப்பதன் நேரடி பொறுப்பு முழுவதும் அப்பாவையே சேரும்.
இந்த நட்சத்திரங்களை எண்ணும் பழக்கத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தது என் பாட்டி தான்.எனக்கு அருணைப் பார்க்கும் போதெல்லாம் மனதின் வலது மூலையின் ஓரத்தில் மடித்து பத்திரமாக வைத்து இருக்கும் பாட்டியின் நினைவு எம்பி வந்து விழுகிறது. அவளே தான் எனக்கு மகனாகப் பிறந்து விட்டாளோ என்று தோன்றும். அப்படி இருந்தால் நான் அதிர்ஷ்டசாலி.
எனது சிறு பிள்ளை பருவத்தின் அனைத்து இரவுகளும் என் பாட்டிக்குச் சொந்தமானவை.ஒவ்வொரு நாள் இரவையும் ஒவ்வொரு சிற்பமாக செதுக்கி என் மனதுக்குள் பத்திரப்படுத்தி விடுவாள். அவை இன்னும் என் மனதுக்குள் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன என் பாட்டியின் நினைவைப் போலவே.
நமது வரலாற்றில் பாட்டிகளையும் கதைகளையும் பிரிக்க முடியாது. அவை ஒரு கிளையில் அருஅருகே முளைத்த இரு இலைகள். கதைகளை சொல்வதற்கு பாட்டிகளை ஒதுக்கிவிட்டதால் தானோ என்னவோ கதைகளிலும் பாட்டிகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது.நிலவில் வடை சுடும் பாட்டி, நரி காகத்திற்கு இடையே சண்டையை மூட்டும் வடையை சுடுவதும் பாட்டி, ஏழு மலைகள் தாண்டி ஏழு கடல்கள் தாண்டி தன் உயிரை ஒளித்து வைத்திருகும் சூனியக்காரியும் பாட்டி என கதைகளில் பாட்டிகள் பரவலாக காணக் கிடைப்பர்.
ஆனால் எனது பாட்டிக்கு கதைகள் சொல்வது பிடிக்காது. என்னை முதல்முறையாக வீட்டின் மாடிக்கு பாட்டி அழைத்துச் செல்லும் போது அவள் ஏதோ வீரதீர சாகசக் கதைகளை கூறப் போகிறாள் என்ற எண்ணத்திலேயே சென்றேன். ஆனால் அப்படி ஏதும் அன்று நடக்கவில்லை. அவள் வானத்தைப் பார்த்த படியேநட்சத்திரங்களை எண்ணுஎன்றாள்.
நான் முடியாது கதை தான் வேண்டும் என்று அடம்பிடித்தேன்.எனது பாட்டி சமாதானம் என்னும் உண்ணாவிரதத்தால் என்னை சாப்பிட வைக்க நினைத்தாள். எனது வீரியமிக்க அழுகையின் இரைச்சலால் கீழே எனது அம்மாவும்,அப்பாவும் தலை தெறிக்க ஓடி மேலே வந்தனர். பாட்டி அவர்களிடம் சாதுவான குரலில் விளக்கி கொண்டு இருந்தாள்.
அவன் கதை கேக்குறானா சொல்லித் தொலைய வேண்டியது தானஏன்ம்மா இப்படி எங்க உயிரைப் போட்டு வாங்கற
என் அப்பா தொடர்ந்து திட்டிக் கொண்டு தான் இருந்தார். ஆனால் என்னால் கேட்க முடியவில்லை. நான் கீழே ஓடிவிட்டேன். ரொம்ப நேரம் கழித்து தான் பாட்டி தன் அறைக்கு வந்தாள்.அவள் அழுதாளா இல்லையா என்று கண்டுபிடிக்கும் அளவிற்கான பக்குவத்தை வயது அன்று எனக்குத் தந்து இருக்கவில்லை.அவளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்.எப்போது தூங்கினேன் என்று எனக்குத் தெரியாது.
அடுத்த நாள் இரவுக்காக நான் காத்திருந்தேன்.இரவு உணவினை முடித்துவிட்டு பாட்டியை நானே மாடிக்கு அழைத்துச் சென்றேன்.பாட்டி மாடியை அடையும் வரை அப்பாவின் பார்வை பாட்டியின் மீதே இருந்தது.
மாடியில் அமர்ந்தவுடனேயே பாட்டி வாஞ்ஞையுடன் கேட்டாள்என்னடா கண்ணு கதை சொல்லனுமா
இல்ல பாட்டி நான் நட்சத்திரத்தையே எண்ணுறேன்”.
அவள் கண்ணில் ஏதோ மின்னுவது போலத் தெரிந்தது.கண்ணீர் மின்னும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.
எப்போதுமே முதல் தலைமுறை மீது மூன்றாம் தலைமுறை தான் அதிக பாசம் வைக்கும் என எதிலோ படித்த ஞாபகம். மூன்றாம் தலைமுறையாகிய நான் முதல் தலைமுறையான என் பாட்டியின் மீது உயிரையே வைத்திருந்தேன்.அதனால் தான் அவள் சொன்னதும் என்னால் முடிந்தவரை நட்சத்திரங்களை தினமும் எண்ணுவேன்.ஏன் எண்ண சொல்கிறாய் என்று நான் கேட்டதேயில்லை.மறு கேள்வி அன்பை உடைக்கும் உளியின் மேல் விழும் முதல் அடி.என் பாட்டி என்னிடம் சொன்ன ஒரே நிபந்தனை முந்தைய நாளின் எண்ணிக்கையை விட இன்றைய நாளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.நானும் தினமும் மூன்றாவது அதிகம் இருக்கும்படி எண்ணுவேன்.
ஒருநாள் இரவு, அடுத்த நாள் விழப்போகும் ஆசிரியரின் அடிக்கு பயந்து போய் பாட்டியிடம் புலம்பிய போது தான் அவள் அந்தக் காரணத்தைக் கூறினாள்நட்சத்திரங்களோட எண்ணிக்கை அதிகமாக அதிகமாக வாழ்க்கைல கவலை குறையும்”.எனக்கு ஒன்றும் புரியவில்லை.நான் அடுத்த நாள் விழப் போகும் அடியை நினைத்து மெல்ல தேம்ப ஆரம்பித்தேன்.
நேத்தைக்கு எண்ணுனதோட இன்னைக்கு அதிகமா எண்ணு. நாளைக்கு கண்டிப்பா உனக்கு அடி விழாது.” பொறுமையாக கூறினாள் பாட்டி.
அடியின் மீதான பயமும், பாட்டியின் மீதான நம்பிக்கையும் அன்று எண்ணிக்கையை அதிகமாக்கின.இருந்தாலும் தூக்கம் வரவில்லை.ஆனால் அடுத்த நாள் நான் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது என் மனது முழுவதும் பாட்டி ஒரு நல்ல மந்திரவாதி என்றே மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டேயிருந்தது.இப்போது வரை எனக்கு அடி கொடுக்க வேண்டிய ஆசிரியரை விடுமுறை எடுக்க வைக்க என் பாட்டியினால் மட்டுமே முடியும்.
நான் வீட்டினுள் நுழைந்ததும் நேராக பாட்டியிடம் தான் ஓடினேன்.அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டுஎப்படி பாட்டி அவரை லீவு போட வைச்சஎன்று கேட்டேன்.
நான் போட வைக்கல. நட்சத்திரம் தான் போட வைச்சுச்சுசலனமே இல்லாமல் சொன்னாள் பாட்டி.
அன்றிலிருந்து பாட்டியின் மீதான மதிப்பு அளவிற்கு நட்சத்திரங்களின் மீதும் மதிப்பு வந்தது.ஆனால் அன்பு என் பாட்டியின் மீது மட்டும் தான்.
இரவுகளின் மீதான எனது பயத்தை உடைத்து நொறுக்கியவள் என் பாட்டி.நாளைய தினம் நல்லதே நடக்கும் என தைரியம் சொன்னவள் என் பாட்டி.மகிழ்ச்சியின் ருசியை எனக்கு முதன்முதலில் ஊட்டியவளும் என் பாட்டி தான். எனக்காக இவ்வளவு செய்பவளை எதற்காக என் அம்மா திட்டிக் கொண்டே இருக்கிறாள் என்று தெரியவில்லை. ஆனால் நான் என் பாட்டியுடன் இருக்கும் தருணங்களில் மட்டும் என் அம்மாவின் குரல் என் பாட்டிக்கு எதிராக உயர்ந்ததில்லை. அதனாலயே நான் எப்போதும் என் பாட்டியுடனே இருப்பேன்.
முதலில் நான் நட்சத்திரங்களை எண்ணுவேன். பிறகு அவள் நட்சத்திரங்களை எண்ணுவாள்.நான் எண்ணி முடித்தவுடன் உதிர்க்கும் சிரிப்பை அப்படியே சேகரித்து வைத்துக் கொண்டு அவள் எண்ணி முடித்தவுடன் அப்படியே எனக்குத் தருவாள்.இப்போது சிரிப்பு இருவரிடமும் இருக்கும்.பிறகு நான் அவளது சிறு வயது சம்பவங்களைக் கேட்பேன்.அவள் எனது எதிர்கால கனவுகளைக் கேட்பாள்.அப்பொழுதெல்லாம் எனது கனவு டாக்டராக வேண்டும் என்பது தான். ஆனால் இப்பொழுது ஒரு பெரிய கம்பெனியில் எஞ்சினியராக இருக்கிறேன்.
நட்சத்திரங்களை எண்ணினால் கவலை குறையும் என்று சொன்ன பாட்டி இறந்தது முதியோர் இல்லத்தில்.நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த போது ஒருநாள் பள்ளி விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பாட்டியை அணைக்க நினைத்த போது அவள் அவளது அறையில் இல்லை.எப்போதும் போல் என் அம்மாவுக்கு எதாவது கடையில் வாங்கி வர போயிருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் மாலையும் கடந்து இரவும் வந்தது. பாட்டி வரவில்லை.நானும் இரவும் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று பாட்டிக்கு எப்படி தெரியாமல் இருக்கும்.எங்கு இருந்தாலும் இந்த நேரத்திற்க்கு பேரனிடம் வந்து சிரிப்பை பரிமாறும் நேரமல்லவா இது.இவ்வளவு நேரம் வைத்திருந்த பொறுமையை தூக்கிப் போட்டு விட்டு என் அம்மாவிடம் கேட்டேன்.
பாட்டி எங்கம்மா
அவங்க வேற வீட்டுக்குப் போயிட்டாங்க”.
நின்று கூட பேசவில்லை.நடந்தவாறே பேசிவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள் என் அம்மா. பாட்டிக்காக ஒரு நொடியைக் கூட செலவிட அவள் தயாராக இல்லை. நான் என் ஆயுளைக் கூட செலவிடத் தயாராக இருந்தேன்.எனக்குத் தெரிந்தவரை பாட்டிக்கு என் அப்பா ஒரே மகன்.பிறகெப்படி இன்னொரு வீட்டிற்க்கு போக முடியும் என்று நடைமுறை அறிவு கேள்வி கேட்டது.அதே கேள்வியை நான் என் அம்மாவிடம் கேட்ட போது இரண்டு அடி விழுந்தது தான் மிச்சம்.
 இரண்டே நாட்கள் தான்.காய்ச்சலில் உடம்பு நெருப்பாகக் கொதித்தது.பின் இருக்காது.பாட்டியின் மீதான எனது பாசத்தின் அளவை என்னாலயே தாங்க முடியவில்லை.என்னுள் ஆசையையும்,கனவுகளையும் விதைத்தவள் அவள். குழந்தை வயதின் விளையாட்டோடு வாழ்க்கையையும் போதித்தவள்.அவளை இரண்டு நாட்கள் பார்க்கவில்லை என்றால் உடம்பு கொதிப்பதற்கு பின்னால் இருக்கும் நியாயத்தை என் அம்மாவாலோ இல்லை என் அப்பவாலோ புரிந்துகொள்ளவே முடியவில்லை.விளைவு அடுத்த இரண்டு நாட்களில் உடம்பு தூக்கிப் போட ஆரம்பித்தது.உதடுகள் பாட்டி பாட்டி என்றே முனுமுனுத்தன.இந்த முறையும் முன்னால் சொன்ன நியாயத்தை என் பெற்றோர் உணராமல் இருந்திருந்தால் யாராலும் என்னை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும்.ஆனால் ஒரு ஓரமாய் இருக்கும் பிள்ளை பாசம் அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டது.
நான் மிகவும் சிரமப்பட்டு கண் திறந்தபோது என் எதிரில் பாட்டி நின்று கொண்டிருந்தாள்.துள்ளி எழுந்து கட்டியணைக்க வேண்டும் போல இருந்தது.இமைகளைத் தூக்கவே சக்தி இல்லாதவன் முழு உடம்பையும் எப்படி தூக்குவது.இருந்தாலும் எழுந்து படுக்கையில் உக்கார்ந்துவிட்டேன்.பாட்டி வந்து என்னருகில் அமர்ந்தாள்.அவளது கரம் பற்றி அவள் முகத்தையே பார்த்தேன்.என்னைத் தேற்றுவதற்கான வார்த்தைகளை அவள் உதிர்த்துக் கொண்டிருந்தாள்.கண்கள் உலர்ந்து போயிருந்தன.அவள் அழுதாளா இல்லையா என்ற கண்டுபிடிக்கும் பக்குவத்தை வயது இப்போது தந்திருந்தது.ஆனால் அவளது சம்பிரதயமான வார்த்தைகள் ஏதோ ஒரு இடைவெளியை எங்களுக்குள் உருவாக்கியிருந்தது.
ஆனால் நான் எந்த இடைவெளியையும் கண்டுகொள்ளவில்லை. பாட்டியுடன் இருந்த அரைமணி நேரத்தில் உடம்பிலிருந்த அத்தனை காய்ச்சலும் என் கவலைகலைப் போலவே காணாமல் போயிருந்தன. நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அப்பா வந்தார்.
அம்மா நேரமாச்சு.அஞ்சு மணிகுள்ள உள்ள போகனும். கிளம்பலாம்என்றார்.
சொல்லி முடித்த அடுத்த நொடியில் என் பாட்டி எழுந்துவிட்டாள்.எனக்குக் கூட அந்த வயதில் என் பாடியின் மேல் பயங்கர கோபம் வந்தது.ஆனால் அவள் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அதற்குப் பின் அவளால் எழுந்திருக்கவே முடிந்திருக்காது என்று இப்போது புரிகிறது. நான் எப்படி சமாதானம் அடைந்தேன், நான் எப்படி என் பாட்டியை வீட்டை விட்டு போக அனுமதித்தேன்.எனது அப்பா என்ன விளையாட்டைக் காட்டி என்னை ஏமாற்றினார்,எனது அம்மா எந்த நிலவைக் கையில் பிடித்துத் தருவதாக சொல்லி சோறூட்டினாள் என்றெல்லாம் எனக்கு இப்போது ஞாபகம் இல்லை.ஆனால் என் பாட்டி முதியோர் இல்லத்துக்கு சென்றுவிட்டாள்.
வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை நானும் என் அப்பாவும் முதியோர் இல்லத்துக்கு செல்வோம்.என் அம்மா வராததற்கான காரணங்களை யோசிக்கும் அளவுக்கு நான் கெட்டவன் இல்லை. அன்றைய தினம் என் வீட்டில் என் அம்மா சமைக்கக் கூட மாட்டார்.என் பாட்டிக்குப் பிடித்த தோசையைக் கூட ஹோட்டலிலிருந்து தான் வாங்கிக் கொண்டு போவோம்.
ஞாயிற்றுக்கிழமையின் அழகு முழுவதும் விடுமுறை என்ற வார்த்தைக்குள் தான் ஒளிந்திருக்கிறது.எனக்கு பாட்டி என்ற வார்த்தைக்குள்.என் வீட்டிலிருந்த பாட்டியை இவ்வளவு தூரம் கடந்து வந்து பார்க்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி எல்லாம் எனக்கு அப்போது இல்லை. பாட்டியை பார்த்தால் கிடைக்கும் மகிழ்ச்சி மட்டும் தான் என் குறிக்கோளாக இருந்தது.இப்போது அந்த சுயநலத்தை நினைத்துப் பார்க்கும் போது சோகம் மட்டுமே மிஞ்சுகிறது.சுயநலத்தின் சுழிக்குள் சிக்கித் திண்டாடும் மனிதர்களுக்கிடையே என் பாட்டி மட்டும் பொதுநலவாதியாக இருந்தார்.
நான் அவளை பார்க்க வரும் போதெல்லாம் வெறும் சம்பிரதாயப் பேச்சால் மட்டுமே என்னை வருடிக் கொடுப்பாள்.ஆனால் எனக்குத் தேவையெல்லாம் நிலவொளியின் அடியில் இருட்டை சுவாசித்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணிய பாட்டி தான் வேண்டும். ஆனால் இதை நான் எப்படி அவளிடம் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை.வந்ததற்கு இந்த வருடலாவது கிடைத்தது என்று ஆறுதல் பட்டுக் கொள்வேன்.சில சமயங்களில் பயங்கரமாக கோபம் வரும்.அந்தக் கோபத்துக்குக் காரணாம் பாட்டியாகத் தான் இருக்கும் என்று நினைத்தேன்.அவளும் அந்தக் கோபத்தை நான் வேறு யார் பக்கமும் திருப்பாமல் இருக்கும்படி கச்சிதமாய் பார்த்துக் கொண்டாள்.
எங்களது வார வருகை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு பின் எப்போதாவது என்ற தரத்திற்குள் சென்றுவிட்டது.இந்தக் காலங்கள் என் வாழ்க்கையில் நான் மறக்க வேண்டும் என்று தனியாக எடுத்து வைத்திருக்கும் பக்கங்கள்.தனியாக வைத்திருப்பதனால் தானோ என்னவோ இன்னமும் மறக்க முடியாமலேயே கிடக்கின்றன.சம்பிரதாயமான பேச்சு என்றளவில் இருந்த எங்களது உரையாடல் முழுவதுமாகவே நின்றுவிட்டது.என்னிடம் பேசக் கூட என் பாட்டி விருப்பப்படவில்லை.அங்கிருக்கும் யாரிடமும் கூட அவள் பேசுவதேயில்லை என்று அங்கிருப்பவர்கள் சொன்னார்கள்.அவளுக்கு பேச்சு என்பதே மறந்துவிட்டது. இனி தனது வாழ்க்கையில் ஒரு சொல்லைக் கூட வீணாக்க அவள் விரும்பவில்லை.அவளது பேச்சைக் கூட கேட்கத் தகுதியில்லாதவன் என்று என்னையும் ஒதுக்கி வைத்துவிட்டாள் அல்லது ஒதுக்கியது போல நடித்தாள்.
அடக்கி வைக்கப்பட்ட சொற்கள் அவள் முகத்திற்கு ஒரு சோகக் களையை கொடுத்திருந்தன. எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும் என் பாட்டியை அந்த சோகக் களையில் பார்க்க முடியவில்லை.அவள் ஒரு வார்த்தையைக் கூட உதிர்த்து விடக் கூடாது என்ற முடிவோடிருந்தாள்.தேதிகள் மட்டுமே மாறின. பாட்டி அப்படியே தான் இருந்தாள்.எங்களது ஒரு சந்திப்பில் கூட அவள் எதுவும் பேசவில்லை.கடைசியாக ஒரு நாள் என்னை அருகில் உட்கார வைத்து ரொம்ப நேரம் தலையை கோதிக் கொண்டேயிருந்தாள்.எனக்கு ஏன் என்றெல்லாம் தெரிந்து கொள்ள விருப்பமில்லை.சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்தேன். என்னை சிறு வயதில் பிடித்த அதே கை.ஆனால் இப்பொழுது கொஞ்சம் சொரசொரப்பு ஏறியிருந்தது. வீட்டில் எனக்கு தூக்கமே வரவே இல்லை.அவளது விரல்கள் இன்னும் என் தலையைக் கோதுவது போல் இருந்தது.
நட்சத்திரத்தை வைத்து கவலையை மறக்க வைத்தப் பாட்டிக்கு ஏன் இவ்வளவு சோதனைகள்.கடைசியில் அவளது முகமே கவலை கலந்து காணப்படுகிறதே என மனதுக்குள் பொருமினேன்.அவளது நட்சத்திரங்கள் மட்டும் இறங்குவரிசையில் போக என்ன காரணம் என்று யோசித்தேன்.அடுத்த முறை முதியோர் இல்லத்துக்குச் செல்லும் போது அவளை எப்படியாவது பேச வைத்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.அப்படியே தூங்கிப்போனேன்.
காலையில் அப்பா என்னை அவசர அவசரமாக எழுப்பி எங்கோ அழைத்துச் சென்றார்.செல்லும் வழியில் தான் சொன்னார் பாட்டி இறந்துவிட்டார் என்று.கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வழிந்தது.எனது அப்பாவுக்கும் கூட ஈரமிருக்கிறது என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது.கதறி அழுதுக் கொண்டே முதியோர் இல்லத்துக்குள் ஓடினேன்.எதுவுமே தெரியாதது போல் என் பாட்டி படுத்திருந்தாள்.அழுகையின் நீளம் அழுகையை விட துயரமானது.அழுகை நீண்டு கொண்டே இருந்தது.
முதியோர் இல்லத்தின் உரிமையாளர் என்னிடம் வந்துஎப்பவுமே வானத்தையே பார்த்துட்டு இருப்பாங்க தம்பி.இங்க இருக்குற யார்கிட்டயும் கூட பேச மாட்டாங்க.அப்படி என்னத்தத்தான் பாத்தாங்களோத் தெரியலைஎன்றார்.
அவருக்கு எப்படித் தெரியும் அவள் நட்சத்திரங்களின் வழியே என்னைத் தான் தேடிக் கொண்டிருந்திருக்கிறாள் என்று.
இதை ஏன் அவர் என்னிடம் கூறினார் என்று தெரியவில்லை. நான் என் அப்பாவிடம்இதுவரை நீங்க நட்சத்திரங்களை என்னைக்காவது எண்ணியிருக்கீங்ளாஎன்று கேட்டேன். நான் ஏன் அப்படிக் கேட்டேன் என்றும் தெரியவில்லை.
இப்போது நட்சத்திரங்களை எண்ணி முடித்திருந்தேன். நேற்றை விட ஒன்று அதிகம். அந்த ஒன்று என் பாட்டியாகத் தான் இருக்கும். 

No comments:

Post a Comment