Saturday 5 July 2014

Story 46: 179 கதையற்ற கதைகளை எழுதி அவற்றிற்கு பொருள்தேடி இறந்த எழுத்தாளன்



 179 கதையற்ற கதைகளை எழுதி அவற்றிற்கு பொருள்தேடி இறந்த எழுத்தாளன்

அந்த நூலை அப்போது தான் முதன் முதலாக வாசிக்க ஆரம்பித்தான். அது தான் அவன் வாசிக்கும் நூற்றி எழுபத்தி ஒன்பதாவது நூல். வாசிக்க ஆரம்பிக்கும் போதும் இந்த எண் கணக்கு நினைவில் எழ மர்மமான சந்தேகம் கொள்ள ஆரம்பித்தான். நினைவுகளினூடே அவன் வாசித்த நூற்றி எழுபத்தி எட்டு நூல்களின் தலைப்புகளையும் ஒப்பித்துக் கொண்டான். அறிவின் திறமையை கண்டு அவனே வியந்து மெய் மறந்து நூலின் முதல் வார்த்தையை வாசித்தான். நூற்றி எழுபத்தி ஒன்பது என்பதினுள் ஏதேனும் விசேஷம் இருக்குமா என்று எண்ணத் துவங்கினான். உலகம் முழுக்க எண்கள் இருந்திருக்கின்றன. இதில் இந்த பிரத்யேக எண் என்ன விசேஷம் கொண்டிருந்தாலும் அது எல்லா எண்களுக்கும் பொருந்தியே போகும் என்று சுய சமாதானம் செய்து கொண்டான். சிறு வயதிலிருந்து எத்தனையோ எண்களை கடந்தே வந்திருக்கிறேன் இருந்தாலும் நினைவில் நிற்கக் கூடிய எண் என்று ஏன் ஒன்று கூட அமையவில்லை ? எண்களுக்கு நினைவுகள் இல்லையா அல்லது எண்களை உட்கொண்டவுடன் பிரக்ஞை காணாமல் போய்விடுகிறதா ? எண்கள் அவ்வளவு வித்தியாசமானதா ? தேதி நேரம் பக்கம் எண் வடிவங்கள் தேற்றங்கள் ! எல்லாமே எண்கள்! என் மரணமும் ஒரு எண்ணில் முடிந்துவிடுமா ? இதை வாசிக்கும் வாசகனும் தனக்குள் நிதர்சனமாய் நின்று கொண்டிருக்கும் எண் என ஒன்று உள்ளதா என்று தேடிக் கொண்டிருப்பானா ? அவனும் ஏதேனும் ஒரு காலத்தில் இப்படி சிந்தனையில் அமர்ந்ததுண்டா ? இவனுக்கு நான் யார் என்ற சந்தேகம் எழுந்திருக்கும் தானே ? ஏமாற்ற மாட்டேன். என் பெயர் அரிமா. இப்போது அது பொய் என்றே தோன்றுகிறது. ஓவியங்கள் ஆதி மொழியாக இருந்திருப்பின் அதற்கு பின் வந்தது கணிதமாக தான் இருந்திருக்க வேண்டும். நான் பல்லாயிரம் காலங்களாக உயிர் வாழ்ந்து வருகிறேன். அப்படியிருப்பின் என் பெயர் ஒரு எண்ணாக இருக்க வேண்டுமே ஒழிய அரிமா அல்ல. அரிமா யாரோ செய்த அராஜகம். எண்கள் அழியப்போவதில்லை. இந்த விஷயத்தை நான் என் முன்றாம் வயதில் சகாவுடன் சொல்லியிருக்கிறேன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? (இது சுய சரிதையா ? சுய புலம்பலா ?) மூன்றாம் படிக்கும் போது வகுப்பிற்கு வரும் சில டீச்சர்கள் என்னை அரிமா என்று அழைப்பதுண்டு. சிலர் நம்பர் த்ரீ என்று அழைப்பதுண்டு. இரண்டில் இரண்டாவதற்கு உற்சாகமாக பதிலளிப்பேன். என் அருகில் இருந்த நம்பர் டுவண்டி செவன் என்னிடம் ஏன் என்று கேட்ட போது நான் சொன்னேன் உன் பெயர் மணி. மணி என்னும் பெயரில் இந்த பள்ளியிலேயே பத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். ஆனால் மூன்றாம் வகுப்பு படிக்கும் உனக்கு முந்நூற்றி இருபத்தி ஏழு என்னும் எண்ணை வழங்கியிருக்கிறார்கள். இப்போது சொல் மணி தனித்துவமா முந்நூற்றி இருபத்தி ஏழு தனித்துவமா ? பிறக்கும் போதே ஏன் பிரக்ஞையுடன் பிறக்கவில்லை என்று இப்போது வருத்தம் கொள்கிறேன். ஒரு வேளை பிறந்திருந்தால் எனக்கு பெயராக ஒரு எண்ணையே வைத்திருந்திருப்பேன்.
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. யாதொரு நூலை வாங்கினாலும் அந்நூலில் இதை விலை கொடுத்து வாங்கிய உபாசகன் நான் தான் என்பதை நிரூபிக்க என் பெயரை முதல் பக்கத்தில் எழுதி வைப்பேன். அப்படி கைவசம் வைத்திருந்த நூலில் எழுதியிருக்கும் பெயர் என்ன என்று யோசித்தேன். எதுவுமே நினைவில் எழாமல் போக வாசித்து முடித்த பக்கத்தில் விரல் ஒன்றை வைத்து முதல் பக்கத்திற்கு திருப்பினேன் என் பெயராய் அங்கே இருந்தது நூற்றி எழுபத்தி ஒன்பது என்னும் எண்! சிந்தையினூடே செய்த மாயப்புணர்ச்சியில் தான் பிழைகள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுவரை எழுதி வந்த பத்தியில் நிரம்பியிருக்கும் எல்லா இலக்கண பிழைகளுக்கும் எண்கள் காரணமே ஒழிய எழுதி கொண்டிருக்கும் நான் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. எனக்குள் இருக்கும் எண்களின் பித்தத்தை வடிகாலாக்கவே கதையொன்றை எழுத நினைத்தேன். எண் எப்படி ஒரு மனிதனை தனித்துவம் வாய்ந்தவனாக நிலைகொள்ள செய்கிறதோ அதே போல அவனை போலியாக்கவும் விடுவதில்லை. என் குணங்களை அவன் என்னும் பாத்திரத்திற்கு கொடுத்தே எழுத நினைத்தேன். எனக்கே தெரியாமல் நான் உள்நுழைந்ததால் கதை எழுத வேண்டி என்னுள் உருவாகியிருந்த அவன் அவள் அவர் அவர்கள் அது என எல்லா அகரங்களும் சிதையில்சென்று வீழ்ந்துவிட்டன. நான் என்பதை வைத்து சொல்லவோ என்வசம் எதுவுமே இல்லை. நான் ஒன்றுமே இல்லாதவன்! அசேதனம்!
தோற்றுப் போன பத்தி எழுத்தாளனாய் எழுதியதை மீண்டு வாசிக்கலாம் என புத்தகம் பக்கம் கண்களை திருப்பினேன். பக்கம் நூற்றி எழுபத்தி ஒன்பதில் நின்று கொண்டிருந்தது. வாசிக்க ஆரம்பித்தேன். கண்கள் விரிந்தன. நரம்புகள் மேலெழத் தொடங்கின. தொண்டையிலே புடைத்திருக்கும் கூரான சதை மேலே எழும்பி கீழே செல்லும் போது பிரத்யேகமான எச்சில் துளி உணவுக்குழாய் வழியே கீழ்நோக்கி பயணம் செய்து வயிற்றின் அமிலங்களுடன் கலந்து, யாதொன்றுடனும் ஒன்று சேராமல் பிரிந்து சென்று இரத்தத்துடன் உறவாடி எச்சில் எச்சிலாகவே மூத்திரம் வழியாக போக எச்சிலை கண்டு பயந்த இரத்தம் சதையை முட்டிக் கொண்டு நிற்க சதையின் மேலே புல்லரித்து மயிர்கள் கிளர்ச்சியுற்று நின்றன. மின்சாரம் பாய்ச்சியதைப் போல இருந்த என் கண்கள் சுயநினைவிற்கு விரிந்த போது நான் எழுதிய கதை மூத்திரத்தில் மிதந்து கொண்டிருந்தது. நூலை மூடி சேந்தியில் வீசினேன்.
பித்தேறிய நிலையில் தினசரி காலெண்டர், மாதக்காலெண்டர், அலைபேசி, அலைபேசி எண்கள் அடங்கி இருக்கும் நோட்டு புத்தகம், எண்கள் படும் தாள்கள், சட்டை, பேண்டு, ஷூ, சாக்ஸ், பாத்திரம் என வீட்டில் இருந்த எல்லாவற்றையும் அறையினுள்ளே இட்டு சாத்திவிட்டு வெற்று அறையில் அம்மணமாய் நின்று கொண்டிருந்தான். அவனைத் தவிர அந்த அறையில் இருந்ததெல்லாம் சேந்தியினுள்ளே அவனுக்கு தெரியாமல் மறைந்து இருந்த அவனது கதை. முன்னே இருந்த கண்ணாடியில் தெரிந்த அவன் என்னைப் போலவே இருந்ததான். அவன் செய்த வேலைகள் தான் இது என்று கத்தினேன். கண்ணாடியில் தெரிந்த அவனின் நிர்வாண உடல் எனக்குள் கிளர்ச்சியை உண்டு செய்தது. நீண்டு பெரிதாகி வான்நோக்கி வளர்ந்து கொண்டிருந்த என் குறி என்னை அச்சுறுத்தியது. நூற்றி எழுபத்தி ஒன்பதின் முதல் எண்ணை அது குறிக்கிறது என்பதை உணர்ந்தவுடன் பொருள்களை அடைத்து வைத்திருந்த அறைக்கு ஓடோடி சென்றேன். எல்லா பொருள்களையும் கலைத்துப்போட்டு அரிவாளை எடுத்தேன். கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு நீண்டு வளர்ந்த என் குறியை கையால் பிடித்துக் கொண்டு அரிவாளை ஓங்கினேன். அரிவாளையே என் கண்கள் உற்று கவனித்தது. நூற்றி எழுபத்தி ஒன்பதின் இரண்டாவது எண்ணைப் போலவே இருக்கிறது என்பதை அறிந்தவுடன் கண்களை இறுக்க மூடிக் கொண்டு குறியை வெட்டினேன். இரத்தம் கண்ணாடியில் குறியுடன் இருந்த அவன் மேல் தெறிக்க துடிதுடித்து கீழே சரிந்தேன். கண்களை என்னால் திறக்க முடியவில்லை. வலியில் கையிலிருந்த அரிவாளை விட்டெறிந்தேன். சேந்தியின் சுவற்றில் பட்டு அந்த நூலை கீழே தள்ளி தனக்கான இடத்தை சேந்தியில் பிடித்துக் கொண்டது. என் கண்களுக்குள்ளே வெட்டப்பட்ட ஒன்பது குறிகள் தோன்றின. எண்ணாமல் இருந்திருந்தால் அப்படி தோன்றியிருக்காதே எல்லாமே என் அறிவின் அறிவிலித்தனம் என்று கண்களை வேகமாக திறந்தேன். என்னைப் போலவே பிம்பமாய் இருக்கும் அவன் அழுததால் வெடித்து சிதறிக் கொண்டிருந்த கண்ணாடித் துண்டுகளில் சேந்தியிலிருந்து விழுந்து கொண்டிருந்த நூலின் முதல் பக்கம் தெரிந்தது. பார்த்ததும் இறந்து போனான். இறந்து போனேன். அந்நூலின் தலைப்பு தான் இக்கதையின் தலைப்பும்.

No comments:

Post a Comment