Wednesday 9 July 2014

Story 57: ஆயத்தம்



ஆயத்தம்

உலகின் கடைசி ஜோடி நாங்கள் தான் என அப்போது தான் உறுதி செய்து கொண்டோம். அது குறித்த பெருமிதமும் துக்கமும் ஒரு சேர எங்களை ஆட்கொண்டன. இன்னும் இரு பொழுதுகளுக்கான உணவு மட்டுமே எங்களிடம் மீதமிருந்தன. உலக முடிவு பற்றி பெரும் கிளர்ச்சியோடும் அச்சத்தோடும் பேசப்பட்டு வந்த அபோகலிப்ஸ், டூம்ஸ்டே, நாஸ்டர்டம், அமானுஷ்ய முன்னறிதல்கள், அறிவியல் அனுமானங்கள் யாவும் கருணை வேண்டி எங்கள் காலடியில் மண்டியிட்டிருப்பதாகப் பட்டது. இதோ இந்த இரவோடு எல்லாம் அடங்கிவிடும். எங்களது மரணத்திற்குப் பிறகு ஆதி காலம் தொட்டு மனிதனின் விசுவாச ஊழியனான மரணத்தின் பேருண்மையை பற்றி பேசிப் பேசி மாய யாரும் இருக்கப் போவதில்லை. நம்மைப் பற்றிய எந்தத் தடயமும் தேவையில்லை என அவள் கூறிவிட்டாள். நான் இந்த நாளைக் கூட எங்கேயும் குறித்துவைக்கவில்லை.


கதவிடுக்கின் வழியாகக் கூட இருளை நுழைய விடாது உறங்கும் உறைந்த இவ்விரவில் எங்கள் கடைசிக் கூடல் தனிமையின் பெருவெளியில் நிகழத் துவங்குகிறது. நிலவின் கீழாக அதன் உன்னத ஜ்வலிப்பு உன்னுருவைக் கொள்கிறது. அவள் கேசம் பற்றிப் பின்னிழுத்து உதடுகளில் முத்தம் வைக்கும் போது அவளது கைகள் ஒரே சர்ப்பத்தின் இரண்டு உடல்களென என் இடையை இறுக்குகின்றன. அவளது மேலாடையை நெகிழ்த்துகையில் தான் நினைவு வந்தவள் போல கேட்டாள். அவ்விடத்தில் அக்கேள்வி முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு மொழியினது போல அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததன் மொத்த அர்த்தத்தையும் ஒரு நிமிடம் தனது கைக்குள் சுருட்டி வைத்துக் கொண்டது போல ஒலித்தது. 'ஆணுறை இருக்கா?'. துணுக்குற்று தளர்ந்தேன். 'இல்லை' என்றேன். என் முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தை வாசித்து அவளும் தொய்வுற்றாள்.ஆடையை சரி செய்து கொண்டு ஒதுங்கி ஒருக்களித்து படுத்தபடி 'வயிற்றில் ஓர் உயிரோடு நான் சாக விரும்பவில்லை' என்றாள்.


பெரும் துயரமென கவிழ்கிறது இருள். ஆற்றாமையின் துயரத்தில் விம்மும் உறக்கமற்ற உறக்கத்திலிருக்கும் நம் உடல்களை வெம்மையாக்க இந்த இரவிடம் எந்த உபாயமுமில்லை. இந்த இரவு ஒரு காயமெனப் பதிகிறது. தானே வெந்து தணியப்போகும் கழிவிரக்கத்தில் உன்னுடல் வெப்பம் கொள்கையில் அதன் அனல் என்னுடம்பிலும் சூடேற்றுகிறது. கற்பனையும் கைகளும் இதற்காகத் தான். ஆம் இதற்காகவே தான். நமது கைகள் கடலை வற்றிப் போகச் செய்யும் ஆவேசமாய் மாறுகிறது. ஒவ்வொரு முடிச்சும் மெதுவாக அவிழ்கிறது. அணையில் அடைந்து கிடந்த நதி கட்டற்ற வழியில் தளர்ந்து இறங்குகிறது. எப்போதுமில்லாத குழைவுடனும் இதத்துடனும் வெதுவெதுப்புடனும் புரண்டு புரண்டு ஸ்பரிசிக்கின்றன என் கைகள். மகரந்தம் சூழ் வெளியின் சுதந்திரத்தில் என்னை இன்னும் இன்னும் விரித்துக் கொண்டிருக்கிறேன். நானே நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த தெய்வீக உச்சத்தில் உன் பங்கு வெறும் சிரிப்பும் சிணுங்கல்களும்தான். ஆனால் காலம் அகண்ட மணல் வெளியாகிவிடும் இவ்விரவில் மல்லாந்து படுத்துக் கொள்கிறேன். ஸ்கலிதத்தில் என்னை மீட்டு உன்முன் வைக்கிறேன். முடிவற்றது உன் விரல்கள். உன் புன்னகை. உன் இரக்கம். இப்போது என் முறையல்லவா?


கூரிய பளிங்கு முனைகளென கவிழ்ந்து கிடக்கும் உன் பள்ளத்தாக்கில் விரைந்த விரல்கள் பாதி வழியில் விக்கித்து நிற்கின்றன. இவ்விரவின் நிலவும் நட்சத்திரங்களும் இருளினூடாக அமிலம் சொரிகின்றன. தரை தீ பற்றி எரிகிறது. இரண்டு உடல்கள் இரண்டு அரூபங்களாகி மீளும் தருணம் வாய்க்காமலேயே போகட்டும். உச்சம் நோக்கி நகர்கிறது தீ ஆறு. பின்னர் துவங்குகின்றன ஆயிரம் முத்தங்களின் முதல் முத்தமும் ஆயிரத்தொரு தழுவல்களின் முதல் தழுவலும். வற்றிய சுனை மீளவும் சுரந்து நிறைகிறது ஆதியின் களிப்பு மேலிட. ஆவேசம் உந்தித் தள்ள உன் மீது படரத் துடித்த என்னுடல் அறிந்து அந்த நொடியில் ஸ்தம்பித்த உனதந்த கண்களை இறந்த பிறகும் நான் மறவேன். ஆங்காரத்துடன் என்னை எக்கித் தள்ளினாய். இயலாமையில் அழும் என் நெஞ்சம் வெடிக்கக் பாய்ந்தது உலகின் கடைசி ஓங்காரம். என் கைவிடுத்து ஒரு முத்தம் தந்தாய். எல்லையற்றது உனது கருணை.


வெகு நேரம் நட்சத்திரங்களின் வன்மம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். நிலமெங்கும் மெல்லிய வெம்மை படரத் துவங்கியது. அவள் வலது முலை தொட்டு ' அதிக நேரமில்லை'  என்றேன். எழுந்து அமர்ந்தவள் தனது ஆடைகளை அணிந்து கொள்ள விரும்பவில்லை. எங்களது உடைமைகள் அனைத்தையும் ஒரு சேர குவித்து எரித்து விட முடிவு செய்திருந்தோம். பின்னர் அதனால் எப்பயனுமில்லை என உணர்நது ஒரே ஒரு நூலை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு மற்ற குவித்து வைத்த பொருட்கள் அனைத்தின் மீதும் சிறுநீர் கழித்தேன். அவள் சிரித்துக் கொண்டாள். 'இது மிக அபூர்வமான முதல் பிரதி' என்றேன். 'மரணத்தில் இருந்து தப்பிக்கும் வழி இதில் உண்டா?' எனக் கேட்டாள். 'இல்லை. ஆனால் மரணத்தை பற்றிய காத்திரமான அலசல்கள் இதில் உண்டு' என்றேன். அந்தப் புத்தகத்தை நான் நகர நூலகம் ஒன்றிலிருந்து திருடியிருந்தேன். கரும் பழுப்பேறி தாள்கள் பொடிபடத் தொடங்கியிருந்த புத்தகத்தில் எனக்கு விருப்பமான பதினான்காவது அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பவரும் கேட்பவரும் நிர்வாணமாக காட்சியளிப்பதன் கவித்துவத்தை எந்த புத்தகமும் இதற்கு முன் கண்டிருக்காது. இனிமேலும்.

                    


'சகல ஜீவராசிகளையும் அதிகாரம் செய்யும் மனிதன் எந்த ஜீவராசிக்கு கட்டுப்பட்டவன்?'

'அதிகாரம் செய்வதென்பது உண்மையில் அடங்கிப் போவதே. பயத்தின் வெளிப்பாடே அதிகாரம். காட்டில் வாழும் புலியை விட தனக்கு அடங்கி வீட்டில் இருக்கும் பசுவிடம் மனிதனுக்கு அளவிட முடியாத பயம்.'

'மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாத விஷயம் எது?'

'தனிமை. தனிமையில் தான் அவனது தானெனும் அகந்தை உடைகிறது. அகந்தையின் உடைவு மனிதனின் உடைவு'

'மனிதனால் கடந்து செல்ல முடியாத விஷயம் எது?'

'மரண பயம்'

'அப்படியானால் மரணத்தை சுலபமாக கடந்திடலாமா?'

'சூரியன் பகலை கடந்து இரவில் நுழைவது போல ஒருவன் எளிதாக மரணத்தை கடந்து சென்று விட முடியும். மரணம் குறித்தான பயங்களை உதறிவிடும் போது மரணம் ஒன்றுமே இல்லை.'

'மரணத்தை அறிவது எப்படி?'
'மரணத்தில் பல நூறு யுகங்கள் புதைந்திருக்கின்றன. பிரபஞ்சங்கள் அனைத்தின் நட்சத்திரங்கள் கூடி பிரகாசித்தாலும் ஈடாக முடியாத ஞானம் அதன் உள்ளே சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. பல்லாயிரம் பிரபஞ்சங்கள் உருவாகி அழிந்து மறுபடி உருவாகி அழிந்து காலம் புரிந்து கொண்டிருக்கும் தீராத விளையாட்டின் பங்கெடுப்பாளர்கள் மட்டுமே நாம். மரண பயத்தை வெல்வதே மரணத்தை எதிர் நோக்க சிறந்த வழி'



        


புத்தகத்தை அத்தியாயத்தின் பாதியிலேயே பிடுங்கி எறிந்தாள். இவ்வுலகில் அவர்களது ஒற்றை இருப்பு தாள முடியாத துயரத்தை தந்தது. இத்துயரத்திலிருந்து மீள சாவதைத் தவிர வேறு வழியில்லை. இருளும் ஒளியும் கலந்த வானம் முடிவற்று நீண்டிருந்தது. மேகங்கள் எல்லையற்ற மௌனத்திற்குள் நழுவிக் கொண்டிருந்தன. 'மரணத்திற்காக காத்திருக்க வேண்டாம். நாம் தற்கொலை செய்து கொள்வோம்.' என்றாள். அப்போது அந்தரத்தில் ஒரு புதிய வெளி மெல்ல திரண்டு நீருக்கடியிலிருந்து மேலே வருவது போலவும் மிதந்து இறங்குவது போலவும் உருவாகி அதன் மையம் பேரலை போல வானில் புரண்டு வேகமாக முன்னேறியது. 'நீ சொல்வதுதான் சரி. மரணம் முடிவோ தொடர்ச்சியோ அல்ல. அது ஒரு சிறிய மாற்றம். அவ்வளவுதான். வாழ்வை போல மரணத்தையும் நாமே முடிவு செய்வோம்' என்றேன்.


தேய்ந்து தளர்ந்த பிரயாசையுடன் ஒருவரை ஒருவர் அணைத்து விடுவித்துக் கொண்டோம். ஒரு பூவைப் போல கை விரல்களை மடக்கி விரித்து மாறாத புன்னகையுடன் தான் இறக்கத் தேர்ந்தெடுத்த வழிமுறையை விவரித்தாள். நான் எழுந்து கழிப்பறைக்குச் சென்று ஆளுயரக் கண்ணாடியில் எனது நிர்வாணத்தை கவனித்தபடி நின்றிருந்தேன். வெளியே ஒலிகள் ஓய்ந்து உள்ளமிழந்தவள் கிடக்கும் கோலத்தை நினைத்தபடி தீர்க்கமாக பிம்பத்தில் நிலைத்திருந்த எனது கண்களை வெறித்துப் பார்த்தேன். இரத்தம் மெல்ல ஒரு கோடாக வழிந்து மௌனத்தின் பேரிரைச்சலில் பீறிடத் தொடங்கியது. இந்த பூமியும் மாயமாக மறைந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நாளை உலகின் கடைசி மனிதனும் அவன் மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர் என யுரேனஸ் கிரகப் பதிப்பில் ஏதோ ஒரு பத்திரிகையில் செய்தி வரக்கூடும். உனக்காகவாவது வருத்தம் கொள்ள நானிருந்தேன். எனக்கு நீ கூட இல்லை. உனக்கு பயமாக இருந்ததா? எனக்கு எப்படி இருக்கிறதென்று தெரியுமா? சாகும் தருவாயில் பொய் சொல்லலாம் இல்லையா?

No comments:

Post a Comment