Monday 21 July 2014

Story 79: உள்ளப் பெருக்கு..



உள்ளப் பெருக்கு..
சுதாவிடமிருந்து   அழைப்பு வருமென நான் எதிர்பார்க்கவேயில்லை . " சார் .. எங்க இருக்கீங்க ? வீட்லையா ? நான் சென்னை போயிட்ருக்கேன் , திருச்சில பஸ் மாறுவேன் .. பாக்க முடியுமா ?"  குரலில் அதே குழைவும்  , வாஞ்சையும். அழைப்பு வந்ததில் இருந்து உள்ளம்  துடித்துக் கொண்டிருந்தது. கடைசியாக சுதாவை  நான் பார்த்தது மூன்று  வருடங்களுக்கு முன்பு. தங்கையின் திருமணத்திற்கு கணவனோடு வந்திருந்தாள். சுதாவை ஒருமையில் அழைப்பதும் கூட அனிச்சையாக வந்து ஒட்டிக் கொண்ட உரிமை . என்னைவிட இரண்டு வயது பெரியவள். அவளுக்கும் அதைப் பற்றிய புகார் ஏதும் இருந்ததில்லை . மானசீகமாக அதை விரும்பவும் செய்கிறாள் என்றே நினைக்கிறேன் .

மாலை நான்கு மணி வாக்கில் பஸ் திருச்சி வரும் என்று கூறி இருந்தாள் . மூன்றே முக்காலுக்கு பஸ் ஸ்டாண்ட் போய் விட வேண்டும். புடவை வாங்கி கொடுக்கலாமா வேண்டாமா என்ற நீண்ட சிந்தனைக்குப் பிறகு வேண்டாம் என்று யோசனையைக்  கை விட்டேன் . எனது நீண்ட கால ஆசை இது. வாங்கிக் கொடுத்தால்தான் என்ன ஆகும் ? ஒன்னும் சொல்ல மாட்டாள் . சில நிமிட சம்பிரதாய மறுப்புக்களுக்குப் பிறகு வாங்கிக் கொள்ளவேச் செய்வாள் . கணவரோடு வருகிறாளோ? இருக்காது , அப்படி இருந்தால் அழைத்திருக்கவே  மாட்டாள் .

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு பிரமோஷன் கிடைத்த விஷயத்தைச் சொல்வதற்காக சுதாவை அழைத்திருந்தேன் . போனை எடுத்தது  கணவர்  . பரஸ்பர குசல விசாரிப்புகள் முடிந்து விஷயத்தைச் சொன்னேன் . சுதா வெளியே சென்றிருப்பதாகவும் தாமே சொல்லிவிடுவதாகவும் கூறினார் . எனக்கு ஏமாற்றமாக இருந்தது . அவளிடம் நானே கூற வேண்டும் , சந்தோஷம் கொப்பளிக்க அவள் கூறப்போகும் மறுமொழிகளில் தான் எனது பிரமோஷனுக்கான அங்கீகாரமே இருக்கிறது என்கிற நினைப்பு எனக்கு .  இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் அழைத்தேன் . மீண்டும் கணவர்  . இந்த முறை அவரின் குரலில் மெல்லிய அதிருப்தி தொனி   .  இது நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு சுதாவின் தங்கை ஒரு நேர்காணலுக்காக திருச்சி வந்திருந்தாள் . அவள் கூறித்தான் தெரியும் நான் போன் செய்த இரவு சுதாவை அடித்திருக்கிறார் அவர்  . இன்று வரை அவள்  அதைப் பற்றி மூச்சு விட்டதில்லை . நானும் தெரிந்தாற்போல் காட்டிக் கொண்டதில்லை . எப்பொழுதாவது போன் செய்யும்போதும் , "ஏன் சார் என்ன மறந்துட்டீங்களா , போனே பண்றதில்லை " என்பாள் . " அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல , கொஞ்சம் வொர்க் ஜாஸ்தி " என்று  சொல்லி வைப்பேன்.

நானும் சுதாவும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டது 2008 டிசம்பரில் .      " சார் , நான்  சுதா . புதுசா அப்பாயிண்ட் ஆகி இருக்கேன் அகௌன்ட்ஸ்ல .. வீடு பாக்குறது விஷயமா ரகுநாதன் சார் உங்கள பார்க்க சொல்லி அனுப்பி வச்சார் .." இதுதான் சுதா என்னிடம் முதன் முதலில் பேசியது . சராசரியை விட சற்று குள்ளமான உருவம் , புருவங்களுக்கு மத்தியில் சின்னதாய்  பொட்டு , நடு நெற்றியில் மெல்லிதாய் சந்தன கீற்று . மாநிறம் . அடர் பச்சை நிறத்தில்  காட்டன் சாரி உடுத்தி இருந்தாள்.  அன்று மாலையே நான்கு வீடுகள்  காட்டினேன் . நான் பைக்கில் முன்னால் செல்வது , அவள் ஒரு ஆட்டோ பிடித்திருந்தாள் பின்தொடற. காந்தி நகரில் முதல் தளத்தில் இருந்த வீட்டை பைனலைஸ் செய்து அடுத்த நாளே ஹாஸ்டலை காலி செய்துவிட்டு குடியேறினாள் . அலுவலகத்திலிருந்து   யாரையும் அழைக்க வில்லை, என்னை உட்பட . அலுவலகத்தில் எப்பொழுதாவது எதேச்சையாக சந்திக்கும்போது புன்னகைப்பாள் . மனதிலிருந்து வரும். அவள் சேலை உடுத்தும்   அழகே தனி. அலுவலகத்தில் 18 பெண்கள் சுதா உட்பட. எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று உண்மையில் அவளிடம் ஏதோ இருந்தது. 

அவள் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகி இருக்காது . அப்பாவுக்கு உடம்பு முடியவில்லை என்று இரண்டு நாள் லீவ் எடுத்து விட்டுச் சென்றாள் . மூன்றாம் நாள் நள்ளிரவு அவளிடம் இருந்து அழைப்பு . பேச்சு ஏதும் காதில் விழவே இல்லை . விசும்புகிறாள் என்பது மட்டும் புரிந்தது ." சார் , அப்பா எறந்துட்டாங்க.." என்று கூறிவிட்டு மீண்டும் விசும்பல் . என்ன சொல்வெதென்று  தெரியவில்லை , " கவலைப் படாதீங்க .." என்றுதான்  கூற முடிந்தது . அந்த கணத்தில் அவளுடன் இருக்க வேண்டும், கண்ணீரைத் துடைத்து நெஞ்சோடு அணைத்து " நான் இருக்கிறேன் " என்று கூற வேண்டும் போல் இருந்தது . அலுவலகத்தில் இருந்து யாரும் வரத் தயாராக இல்லை . " அவ்ளோ தூரம் போயிட்டு வரணும் இல்ல ?  என்ன செய்றது கஷ்டமாத்தான் இருக்கு .. வரட்டும் பேசிக்குவோம் .." என்றனர் .  அதிகாலையே திருநெல்வேலிக்கு பஸ் ஏறினேன் . அங்கிருந்து பொட்டல்புதூர் செல்லும் பேருந்தில் ஏறி லஷ்மிபுரம் வளைவில் இறங்கி இரண்டு கிமீ நடை . ஊர் ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல , துஷ்டி வீட்டை எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது . சுற்றிலும் மூங்கில் படல் சாத்திய ஓட்டு வீடு. சுதா தலைவிரி கோலமாய் இருந்தாள் . அருகில் சகோதரிகள் மற்றும் உறவுக்கார பெண்மனிகள். நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறிக்கொண்டிருந்தனர் . நான்  வந்ததை சுதா  கவனிக்கவில்லை . தாமிரபரணி கரையில் வைத்து எரித்து , சாம்பல் கரைத்து மீண்டும் வீடு திரும்புகையில் இருட்டி விட்டது . கூட்டத்தில் நான் மட்டும் தனியாகத் தெரிந்தேன் . சுதாவின் சித்தப்பா என்று அறிமுகப் படுத்திக் கொண்டவர் , என்னை  யாரென விசாரித்துத் தெரிந்துகொண்டார் "அண்ணனுக்கு மூணு  பிள்ளைவோ .. சுதா  மூத்தவோ . அந்தா நிக்காள்லா அவ ரெண்டாமத்து , வித்யா. இளையவோ அனிதா , ப்ளஸ் ஒன்ல படிக்கா  . என்னத்த சொல்ல ..   சுதா தலைல இப்படி  பாரத்த எறக்கி வச்சுட்டு கிளம்பிட்டாவோ .. தினத்தந்தி ஆபீஸ்ல என்னத்த பென்ஷன் குடுத்துருவான்? 5 ஆயிரம் வந்தாலே பெருசு ..  "  . பெரியம்மா வயதில் இருக்கும் ஒருவர் கைத்தாங்கலாக சுதாவை அருகில் கூட்டி வந்தார் . என்னை நம்ப முடியாமல் பார்த்தவள் , கை கூப்பி வணக்கம் வைத்து , பின்பு அப்படியே கண்களைப் பொத்தி , மண்டியிட்டு அழ ஆரம்பித்து விட்டாள் .நெஞ்சு இழைந்து குழைந்து ஆறாக ஓடுவதைப் போல் உணர்ந்தேன் . நான்கைந்து பேர் ஓடிவந்து சுதாவை தூக்கிச்  சென்றனர் .

வண்டியை ஸ்டார்ட் செய்தேன் . பி.ஜி . நாயுடுவில் ரசகுல்லாவும் ,  குலாப் ஜாமூனும் வாங்கிக் கொண்டேன்.  மூன்றரை தான் ஆகி இருந்தது .மேகம் திரண்டு இருட்டிக் கொண்டு வந்தது . எந்நேரமும் மழைப் பிடித்துக் கொள்ளும் போல் இருந்தது . சென்னை செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் இருக்கும் திண்டில் அமர்ந்து கண்களை மூடினேன் .

சுதாவின் அப்பா தவறி இரண்டு  மாதங்கள் இருக்கும் . " சார் , வீட்டுக்கு வந்துட்டு போவீங்களா .. " என்றாள் . அவளுக்கு வீடு பார்த்து கொடுத்ததில் இருந்து அதுவரை வீட்டிற்கு ஒருமுறை கூட அழைத்தது இல்லை . என்னை என்று இல்லை, யாரையும். அலுவலக நேரம் தவிர போன் அழைப்பும் இருக்காது . 350 கிமீ குடும்பத்தாரை விட்டு தள்ளி தனியே பிழைக்க வந்திருக்கும் பெண் ஆகையால் , இதெல்லாம் அவளே அமைத்துக் கொண்ட தற்காப்பு வளையங்கள் என்பதாக  புரிந்துகொண்டேன் . சுதாவின் வீடு  மாடியில்.  தரை தளத்தில் வீட்டு ஓனர் குடும்பம் . கீழே கேட் திறந்தே இருந்தது . சுதாவே திறந்து வைத்திருக்க வேண்டும் . படிக்கட்டுகள் ஏறி கதவைத் தட்டினேன் .  " அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க , குளிச்சுட்டு இருக்கேன் , வந்துடுதேன் "  உள்ளேயிருந்து குரல் வந்தது . நம்மை வரச் சொல்லிவிட்டு எதற்கு குளிக்கப் போனாள் ?   வேறேதும் குறிப்பாய் உணர்த்துகிறாளோ?  சின்னதாக சபலம் எட்டிப் பார்த்தது . சரியாக ஐந்து நிமிடத்தில் கதவைத் திறந்தாள் . மைசூர் சாண்டல் வாசம் வீசியது . " சாரி சார் நீங்க வர்றதுக்குள்ள குளிச்சுடலாம்னு நினைச்சேன் .. ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டீங்க இல்ல .. சாரி .. "   எந்த கல்மிஷமும் இல்லாமல் கூறிவிட்டு புன்னகைத்தாள்  . ஈரக்  கூந்தலை வாரி கொண்டை  இட்டு துண்டைக் கொண்டு  சுற்றி இருந்தாள் . இளமையின் தேய்பிறை வருடங்களில் இருந்தாள் , 27 வயது . உட்கார சொல்லிவிட்டு டீ எடுத்து வர  கிட்செனுக்குள் சென்ற போது  எவ்வளவோ கட்டுப்படுத்தியும் அவளது கச்சிதமான பிருஷ்டங்களில் இருந்து கண்களை விளக்கிக் கொள்ள  முடியவில்லை . டீ கோப்பையை என்னிடம் கொடுத்துவிட்டு தரையில் அமர்ந்து கொண்டாள் . நான் அவளது தனங்களைத்  தேடினேன். இன்னும் அவை தீண்டப் படவே இல்லை என்பதை என்னால் நிச்சயம் கூற முடியும் . முகம் பூரித்து , மெல்லிதாக படர்ந்த வெட்கத்தை மறைத்துக் கொண்டு ,    " சாருக்கு அப்பா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க என்ன சார் ?  கோபாலன் சார் தான் சொன்னாங்க .." நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை . மனது விட்டு  பேச அழைத்திருக்கிறாள் . நானும் அப்பனில்லாதவன் என்கிற செய்தி அவளுள் காதலையோ பரிதாபத்தையோ  உண்டு பண்ணியிருக்க வேண்டும்  . வீட்டில் தலைப் பிள்ளை எனபதில் இருந்து குடும்ப பாரத்தை இளவயதில் இருந்தே சுமக்கிறோம் என்பது வரை எனக்கும் அவளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன . நானும் தரையில் இறங்கி அமர்ந்தேன் . அவளது கண்களில் நீர் கோர்த்து இருந்தது . நிறைய பேசினாள் . வீடு திரும்புகையில்  பை நிறைய வீட்டில் செய்த பலகாரங்களைக் கொடுத்தனுப்பினாள் . " சுதா , தைரியமா இரு .. கவலைப் படாத  .." என்றேன் விடைபெறும்போது . ஒருமையில் அழைக்க ஆரம்பித்ததும் அன்றிலிருந்துதான் . கதவோரம் சாய்ந்துகொண்டு மெலிதாய் மீண்டும் ஒரு புன்னகை  . அப்படி நான் அழைத்தது அவளுக்கு பிடித்திருக்க வேண்டும்.

ஒரு தினம் அலுவலக் கேண்டீனில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது , சுற்றி சுற்றி வந்தாள் . ஏதோ பேச விரும்புகிறாள் என்பது புரிந்தது . பிரிந்து கடைசி வரிசையில் இருந்த மேசை  பக்கம் சென்று அமர்ந்தேன். எதிர் பார்த்தது போலத்தான் . தயங்கியவாறு அருகில் வந்தவள் , " சார் , கிறிஸ்டி என்னோட பிரண்டு , திசையன்விள காரி . ஸ்டேட் பாங்க்ல வேல பாக்கா .. இங்க இப்பம் டிரான்ஸ்பர் ஆகி வந்துருக்கா .. என்னோட வீட்ல தங்கிக்கிடனும்னு சொல்றா .." அத்தோடு நிறுத்தி விட்டாள் . அவளைச் சேர்த்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று அனுமதி  கேட்கிறாளா ? இல்லை தகவல் சொல்கிறாளா ? என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை . சுதாவிற்கு பிறகு அலுவலகத்தில் சேர்ந்தவள் பூர்ணிமா . சொந்த ஊர் நிலக்கோட்டை . கோபாலன் சார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வீடு ஷேர் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று பிடிவாதமாக நின்றவள் சுதா . அலுவலகத்தில் பாதி பேருக்கு இந்த விஷயத்தில் அதிருப்தி உண்டு . இப்பொழுது கிறிஸ்டி விஷயத்தில் என்னுடைய ஒப்பீனியன் எவ்வகையில் இவளுக்கு முக்கியத்துவம் என்று நிஜமாகவே குழம்பிப் போனேன் . " சும்மா உங்கள்ட சொல்லிகிட்டேன்  .." அவளே சமாளித்து முடித்து வைத்தாள் .

லேசாக தூறல் விழ ஆரம்பித்தது . சேலைத் தலைப்பால்  முக்காடிட்டபடி நர்சிங் கல்லூரி மாணவிகள் சாலையைக் கடந்து கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு சேலை வாங்கி கொடுத்தால்தான் என்ன என்று தோன்றியது  . இன்னும் கால் மணி நேரம் இருந்தது . விருட்டென்று எழுந்து வண்டியைக் கிளப்பி பெமினாவிற்குள் நுழைந்து விட்டேன் . அடர் பாசி நிறத்தில் காட்டன் சேலை ஒன்றை எடுத்துக்கொண்டு மீண்டும் அங்கேயே வந்து அமர்ந்து கொண்டேன் . மழை நினைவுகளை கிளறிப் போட்டுக்கொண்டே இருந்தது . ஒரு நாள் இரவு இதே மாதிரியான  மழை ..  சுதா போனிலிருந்து அழைப்பு வந்தது. பேசியது கிறிஸ்டி .. " சார் , சுதாவுக்கு காய்ச்சல் .. சாயந்தரம் தலை வலிக்குன்னு சொன்னா . இங்க கார்த்திகேயன்ட்ட காம்ச்சோம் .. அப்போதைக்கு பரவாயில்லாம இருந்தது .. இப்ப சூடு நல்லா ஏறிட்டு , கொதிக்குது சார் .. கொஞ்சம் வருவேளா ..?" பதட்டமாக சொன்னாள். ஆட்டோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு காந்தி நகர் சென்றேன் . சுதா துவண்டு போய் கிடந்தாள் . கிறிஸ்டியும் நானுமாக கைத்தாங்கலாக பிடித்து வந்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டோம் . காவேரியில் அட்மிட் செய்து, கிறிஸ்டியை உடன் இருக்க சொல்லி விட்டு ரூமிற்க்குச் சென்றுவிட்டேன் . காலை அலுவலகத்தில் லீவ்  சொல்லிவிட்டு மருத்துவமனை வந்தபோது  ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது . கிறிஸ்டி அலுவலகம் செல்ல வேண்டும் என்றாள் . மதியம் டிஸ்சார்ஜ் செய்து மறுபடி ஆட்டோவில் அழைத்து சென்ற போது ஆறுதலாக தோளில் சாய்த்துக் கொண்டேன். ஆசுவாசமாக மார்பில் புதைந்து கொண்டாள்.

மழை வலுத்து பெய்தது . அனைவரும் பிளாட்பாரத்தில் கிடைத்த இடத்தில் ஒண்டிக்கொண்டனர் . நினைவுகள் பின்னோக்கி இழுத்தவாறு இருந்தது. ஒருமுறை ஊரில் இருந்து சுதாவின் அம்மா வந்திருந்தார்.  "நீங்கல்லாம் கூடத்தான இருக்கீங்க .. கொஞ்சம் எடுத்து சொல்லுங்களே .. கல்யாணம் இப்ப வேண்டாங்கா .. இவளுக்கு அடுத்து ரெண்டு பேரு நிக்காவோ .. நான் என்ன செய்வேன் . முத்து மாலையம்மன் மனசு வச்சுட்டா  .. நல்ல வரன் வந்துருக்கு .. மாப்பிள்ளை களக்காடு பக்கம் .. இவ வந்து பாக்க மாட்டேங்கா .. " என்று ஆரம்பித்து பெரிய புகார் பட்டியலை வாசித்தார் . அலுவலகத்தில் இருந்த அனைவரும் சுதாவிற்கு புத்திமதி கூறினர் . " நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன் " என்று  தொண்டை வரை வந்துவிட்ட வார்த்தைகளை ஏனோ முழுங்கிக் கொண்டேன். அம்மா ஊர் திரும்பிச் செல்லும்போது சுதாவையும் கூட்டிச் சென்றாள் . முத்து மாலையம்மனுக்கு பால் குடம் எடுப்பதாக வேண்டுதலாம்.

சுதா திரும்பி வந்தபோது பழைய சுதாவாக இல்லை என்பது புரிந்தது . எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்துக் கிடந்தேன் . ஒருவாரம் கழித்து மீண்டும் அம்மா வந்தார் , இம்முறை கல்யாணப் பத்திரிக்கையோடு . களக்காடு மாப்பிள்ளையை பேசி முடித்துவிட்டார்களாம். சுதா ஏன் என்னிடம் இதைப் பற்றி பேசவே இல்லை என்ற கோபமும் , இயலாமையும் சேர்ந்து பேச்சு முட்டியது எனக்கு . பத்திரிக்கையை நீட்டும்போது எந்த சலனமும் இல்லாமல் இருந்தாள் . எப்படி முடிகிறது இவளால்.? எனது கைகள் நடுங்குவதையாவது கவனித்தாளா இல்லையா என்பது தெரியவில்லை. அதற்கடுத்த மாதம் கல்யாணம் களக்காட்டில் நடந்தது. மாப்பிளை சுதாவை விட 10 வயது மூத்தவராம் .அலுவலகத்தில் இருந்து வேன் ஏற்பாடு செய்து கொண்டு சென்றார்கள். நான் உடம்பு சரியில்லை என்று காரணம் கூறி தவிர்த்து விட்டேன். ஏன் வரவில்லை என்று இதுவரை சுதாவும்  கேட்டதில்லை.

திருநெல்வேலியில் இருந்து வந்த SETC நான் அமர்ந்திருந்த திண்டிற்க்கு நேராக வந்து நின்றது . பதினான்காவது ஆளாக இறங்கினாள் சுதா. ஏகத்துக்கும் மாறி  இருந்தாள் .  முகத்திலும் இடையிலும் சதை பிடித்திருந்தது. கண்களில் பழைய புத்துணர்ச்சி இல்லை . ஆனால் அதே சேலைக் கட்டு . சந்தனக் கீற்று. பச்சை  நிற சேலையில் அழகாக இருந்தாள் . கையில் இரண்டு பெரிய டிராவல் பேக் . ஓடிச்சென்று ஒன்றைப் பிடுங்கினேன். ஸ்தம்பித்தவள் , சுதாரித்துக் கொண்டு .. " சார் என்ன இப்படி எளைச்சு போயிருக்கீங்க ? சாப்ட்றீங்களா இல்லையா ? "  சுதா சம்பிரதாயத்துக்கு எதுவும் கேட்க மாட்டாள் . குறிப்பாக என்னிடத்தில் . காபி சாப்பிடலாம் என்றேன். கிருஷ்ண பவன் சென்றோம் நனைந்து கொண்டே. ஆர்டர் செய்து விட்டு பேச ஆரம்பித்தாள் .நிறைய விசாரணைகள் . என்னைக் குறித்தும் என் அம்மாவைக் குறித்தும் . கிராமத்தில் இருந்து அம்மாவை அழைத்து வந்து என்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாள் . அவளே வீட்டில் செய்த அச்சு முறுக்கு பாக்கெட்டுகளை  கையில் திணித்தாள் . 
" சுதா தப்பா எடுத்துக்காத .. ஒன்னு கேக்கட்டா ?"  சட்டென்று அமைதியானவள் பதட்டத்துடன் என்ன என்பது போல் பார்த்தாள் ..             " குழந்தைங்க ..?  ஏன்? வேணாம்னு இருக்கீங்களா ? ஏதும் பிரச்சினையா ..? சொல்ல முடியும்னா சொல்லு , கம்பல் பண்ணல .. கேட்காமவும்  இருக்க முடியல .."  சற்று நேரம் தரையையே வெறித்தவள் நிமிர்ந்து வெறுமையாக புன்னகைத்தாள் . கண்கள் கலங்கி இருந்தது .  மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. "நேரம் ஆயிடுச்சு., கால் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க" என்றாள் . இரண்டு பைகளையும் அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி நடந்தேன். பெருமிதமும் பூரிப்புமாக பின் தொடர்ந்தாள் . முதலில் நின்றிருந்த சென்னை பேருந்தில் ஏறி இடம் பார்த்து அமர வைத்தேன். சேலை நியாபகம் வந்தது. இனிப்புகளைக் கொடுத்தேன் . சேலையை கொடுக்கலாமா வேண்டாமா என்கிற கடைசி நேர தத்தளிப்பில் , மருகி நின்றேன். முதுகிற்கு பின் ஏதோ இருக்கிறது என்பதை கண்டு கொண்டவள் , "அது என்ன?" என்றாள் . தயக்கத்தோடு காண்பித்தேன் . ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவள் ,    " ஏன் கொடுக்க மாட்டீங்களா? எனக்கில்லையா அது ? "  என்றாள் . கைகள் நடுங்க நீட்டினேன். பெற்றுக்கொண்டவள் , ஓரத்தில் பிரித்து நிறத்தைப் பார்த்தாள் , முகம் மலர்ந்தது . சேலையை  நெஞ்சோடு அனைத்துக் கொண்டு , "தேங்க்ஸ்" என்றாள்  தழுதழுக்க . மீண்டும் கண்கள்  குளமாகி இருந்தது  . குனிந்து கொண்டாள் . நான் அவளது தலையில் வருடி , " ஒழுங்கா சாப்டு .. உடம்பப் பார்த்துக்கோ .." என்றேன் . அவள் நிமிரவே இல்லை . இறங்குவதற்காக திரும்பினேன். " சார் .."  அழைத்தாள் ." சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க .. அடுத்த முறை பாக்கும்போது வைஃபோடத்தான் பார்க்கணும் என்ன? " என்றாள் . ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்து   விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன். முன்னைக் காட்டிலும் மழை வலுத்து பெய்ய, உள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியது.

No comments:

Post a Comment