Tuesday 22 July 2014

Story 81: பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா

 பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள். என் இடது கண்ணும் துடித்தது உன்னை கண்டேன் இந்நாள் பொன்னாள் “ L.R. ஈஸ்வரி பாடிக்கொண்டிருந்ததை சுகமாய் கேட்டுக்கொண்டே நண்பர்களுடன் டீ குடித்தவண்ணம் ஆழ்வார் டீக்கடையில் நின்றிருந்தேன்.

லிஸ்டன் ஏதோ ஒரு வெளிநாட்டவனுடன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். லிஸ்டன் ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்பவன். நிறைய மொழி அறிந்தவன். பாதி நாள் ஹார்பரில் வேலை செய்தால் மீதி நாள் ஊருக்குள் கப்பலில் வந்த ஏதாவது வெளிநாட்டுக்காரன் ஒருவனுடன் மணி எக்ஸ்சேஞ் / பிளைட் டிக்கெட் புக்கிங் / சரக்கு என திரிவான்.

நேரே அந்த வெளிநாட்டவனுடன் டீக்கடைக்கு வந்தவன் சற்று தள்ளி நின்று கொண்டு என்னை நோக்கிவிஜி ( விஜி என்ற விஜயக்குமார் ஆகிய நான் ) இங்க வாஎன்றான்.

என்னை எதற்கு கூப்பிடுகிறான் என எண்ணிக்கொண்டேஎன்ன மாப்ளஎன்றேன்.

விஜி ...........இது என்னுடைய நண்பன் கிளிப்போர்ட். எத்தியோப்பியால  இருந்து வந்திருக்கான். தொல் பொருள் ஆராய்ச்சி அப்புறம் பழைய பொருட்கள் சேகரிப்பது இவனுடைய ஹாபி. இவனுக்கு பழைய பெட்ரோமாக்ஸ் லைட் வேணுமாம். உங்க ஊரு கோயில்ல நிறைய நாம பாத்திருக்கோமே. ஒன்னு ஏற்பாடு செஞ்சு கொடு. காசு தந்திருவான். ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிராதடா. என் மானம் போயிரும்

நீண்ட யோசனைக்கு பின் காசு கிடைக்கும் என்று உத்தரவாதம் தந்ததால் மறுநாள் காலையில் அவர்களை அழைத்து கொண்டு என் சொந்த கிராமமாகியகொல்லம்பரப்புசெல்ல முடிவு செய்யப்பட்டது. லிஸ்டன் ஏதோ வேலை வர இயலாது நீயே இவனை வண்டியில் அழைத்து செல் என்றான். அதற்கும் தனியாக பாரின் சரக்கு அனைவருக்கும் ஏற்பாடு செய்வதாக சொல்ல சரி என்று சம்மதித்து மறுநாள் காலையில் கிளிப்போர்ட்டை அழைத்துக்கொண்டு வண்டியில் கொல்லம் பரப்பு கிளம்பினேன்.

கொல்லம்பரப்பு ஊரில் இருந்து 35 கிலோமீட்டர் தள்ளி உள்ள சிறிய கிராமம். அந்த காலத்தில் தாத்தா தான் ஊர் பண்ணையார். தோட்டம் / விவசாயம் / வீடு என இன்னும் இருக்கிறது. வசதி இருந்ததால் இயல்பாக ஊர் கோயில் தர்மகர்த்தா ஆனார். இன்னமும் கோயில் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. வெண்டைக்காய் / மிளகாய்  / குத்தகை புளி என எல்லாம் வீட்டுக்கு வந்துவிடும் தேவையான அளவுக்கு.

சரியாய் 12 மணி அளவில் ஊர் கோவில் வாசல் அடைந்தோம். எப்பொழுதும் கோயில் மரத்தடியில் ஒரு கூட்டமே அமர்ந்து சீட்டு விளையாடும். எங்களை கண்டதும் ஒரு வணக்கம் போட்டு விட்டு  கலைந்தது கூட்டம். மாரி கோவில் சாவியை கையில் கொடுத்துவிட்டு இளநீர் பறிக்க சென்று விட்டான். நானும் கிளிப்போர்ட்டும் கோயிலுக்குள் நுழைந்தோம்.

பழைய மராமத்து சாதனங்கள் போடும் அறைக்கு அழைத்து சென்றேன். தார்ப்பாய் / பெரிதும் சிறிதுமாய் ஏராளமான சமையல் பாத்திரங்கள் / மைக் செட் / ஜமுக்காளம் / நிறைய கோரை பாய்கள் அப்படியே ஓரமாய் 12 டுக்கும் மேல் பெட்ரோமாக்ஸ் லைட்கள் இருந்தன. லைட்டை கண்டதும்வாவ்என ஏதோ காணாததை கண்டது போல வாயை பிளந்தான் கிளிப்போர்ட்.

ஒரே ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டை கையில் எடுத்தவன் அதன் அடிபாகத்தை நூதன முறையில் தட்டிப்பார்த்தான். பின் ஏதோ உறுதி செய்தவனாய் இந்த அடிபாகம் மட்டும் போதும் என்று கூற எனக்கும் கூட அதில் நிம்மதி. முழு பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினால் மாரி முதற்கொண்டு அனைவரும் எதையாவது யோசிப்பார்கள். எப்படி கொண்டு செல்ல என யோசித்திருந்தேன். இவனாக அடிபாகம் கிடைத்தால் போதும் என்றது பெருத்த சந்தோசத்தை தந்தது. எண்ணெய் இல்லாத பெட்ரோமாக்ஸ் தேடி கண்டெடுத்து எல்லாவற்றையும் கழற்றி அடிபாகத்தை மட்டும் ஒரு துணியில் சுருட்டி வேக வேகமாக வந்து வண்டியில் வைத்துக்கொண்டேன். வந்த வேலை முடிந்து விட்டது. மாரியை இன்னும் காணவில்லை. காத்திருந்தோம்.

10 நிமிடம் கழித்து மாரி நான்கு இளநீர்களோடு வந்தான். குடித்துவிட்டு சும்மா தான் வந்தேன். என் பிரண்ட் வெளிநாட்டுக்காரன் கோயில் பார்க்கனும்ன்னு சொன்னான் என்று சொல்லி கிளம்பினேன்.

மீண்டும் 35 கிலோமீட்டர் பயணித்து ஊர் வந்ததும் கிளிப்போர்ட்அரிசி வேண்டும் வாங்கி கொடுஎன்றான்.

அரிசி எதற்குஎன கேட்கஇல்லை இல்லை கண்டிப்பாக வேண்டும் அதுவும் நான் பார்த்து வாங்க வேண்டும். ஏதேனும் அரிசி கடையில் வண்டியை நிறுத்துஎன வற்புறுத்த ஒரு அரிசி கடையில் நிறுத்தினேன்.

அவன் தேடி துலாவி பச்சரிசியை ஒரு கிலோ வாங்கினான். மனதில் ஏதோ உறுத்தியதுஎத்தியோப்பியாகாரனுக்கு அரிசி எதுக்கு....ஏதோ உள்குத்து இருக்கு. என்னன்னு பார்க்கணுமேஎன்று எண்ணியவனாய்

லிஸ்டன் பணம் தருவதாக சொன்னான். பணம் இப்பொழுதே வேணும் எனக்கு. அப்போ தான் பெட்ரோமாக்ஸ் லைட் தருவேன்என சொல்லஅறைக்கு வா தருகிறேன்என சம்மதித்தான்.

ஆக அவன் தங்கி இருந்த திலக் ஹோட்டல் அறை என் 303 வரை சென்றேன்.

பெட்ரோமாக்ஸ் லைட்டை கையில் வைத்து கொண்டு பணம் எங்கே என்றேன்.

பெட்ரோமாக்ஸ் லைட் செக் செய்யாமல் பணம் தர முடியாது. பொறு அரை மணி நேரத்தில் இந்த பெட்ரோமாக்ஸ் லைட் எனக்கு தேவையா வேண்டாமா என சொல்லிவிடுவேன். லைட் எனக்கு தேவை என்றால் உன்னுடைய பங்கு ஐம்பது ஆயிரம் வாங்கிக்கொள் என்றான்.

அடப்பாவி ஐயாயிரம் தானே லிஸ்டன் சொன்னான் என மனதிற்குள் எண்ணிக்கொண்டு இன்னும் ஆவல் அதிகமானவனாய் அவன் செய்யலை கண்டும் காணாதவன் போல அமர்ந்து கொண்டு டிவி பார்த்துக்கொண்டே அவனை நோட்டமிட்டேன்.

கொண்டு வந்த பெட்ரோமாக்ஸ் அடிபாகத்தை நன்கு கழுவினான் பின் குடிக்கும் நீரை அதில் ஊற்றி அரை கிலோவுக்கு மேல் அரிசியை அந்த அந்த டிபன் பாக்ஸ் போல இருக்கும் அடிபாகத்தில் கொட்டி ஊற வைத்தான்.       

பின் அறையில் ஒரு ஓரமாய் கட்டிலின் மேல் இருந்த சூட்கேசை எனக்கு காட்டாமல் மறைத்தவண்ணம் திறந்து எதையோ பார்த்துவிட்டு பின் வேகமாய் மூடிவிட்டான்.  

ஏன் மறைக்கிறான் என ஆவல் வந்தவனாய் அவன் சிகரெட் பற்றவைத்து உச்சா போக பாத்ரூம் போன நேரத்தில் வேகமாக சென்று அந்த சூட்கேஸை திறந்து பார்த்தேன். உள்ளே ஒரு டைரி கொஞ்சம் துணி கொஞ்சம் டாலரில் பணம் நான்கைந்து விசிட்டிங் கார்ட் மற்றும் ஒரு ஓரமாய் வெள்ளை வெள்ளையாய் நிறைய பிளாஸ்டிக் பாக்கெட்டில் ஏதோ இருந்தது. அதில் இருந்து வேகமாக மூன்று பாக்கெட் அள்ளி என் பேன்ட் பாக்கெட்டில் போட்டு மறைத்து கொண்டேன் கூடவே விசிட்டிங் கார்டை மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டேன். என் கணிப்பு சரியாக இருக்குமானால் இது அதுவாகத்தான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

ஒரு பதட்டம் வந்து தொற்றி கொண்டது இப்பொழுது. அவன் கண்டுபிடித்து விடுவானோ நாம் எடுத்ததை என. 

20 நிமிடம் கழிந்திருக்கும். பெட்ரோமாக்ஸ் அடிபாகத்தில் ஊற வைத்த பச்சரிசியை வெளியே ஒரு பேப்பரில் கொட்டினான். ஏதோ பச்சை நிறத்தில் முக்கி எடுத்தது போல உண்மையாகவே பச்சை அரிசியாக காட்சி அளித்தது. அதனை பார்த்தவன் ஆசுவாசமானான். நீண்ட மூச்சை இழுத்து விட்டான். பின் மெல்லிய புன்னைகை உடன்  டாலரில் ஐம்பதாயிரம் தந்தான்.

அவன் முழுக்க சந்தோஷ நிலையில் இருந்து கொண்டுநீ சந்தோசம் தானேஎன்றான்.

ஆமாம் .........ஆமாம் என்று சொல்லி விடைபெற்று வேகமாக ஆழ்வார் டீக்கடை வந்தேன். கடையில் செல்வதற்கு முன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பாக்கெட்டை பிரித்து கொஞ்சமாய் ஒரு சிறிய பேப்பரில் கொட்டி மடக்கி எடுத்து கொண்டு கடையை நோக்கி நடந்தேன்.

மாப்ள ..........இங்க ஒரு கஞ்சா குடுக்கி வருவானே. எங்க அவன்

  ரிக் ஷாக்காரன் தானே..........அந்தா உக்காந்து இருக்கான் பாருஎன கையை காட்ட அவனை நோக்கி நடந்தேன்.

அவன் அருகில் சென்ற என்னை ஏற இறங்க பார்த்தான். ‘ பொட்டணம் எல்லாம் விக்கிறது நிறுத்தியாச்சு. எவனாவது சொன்னான்னு என்ட வந்து கேக்காதீங்க. உங்களாக போலிஸ்க்காரன் பூ ன்னா என்னை வந்து தான் வெளுக்கிறான்

நான் ஒன்றும் பேசாமல் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் கவனிக்காததை அறிந்து மடக்கி வைத்திருந்த பேப்பர் பொட்டணத்தை அவன் எதிரே திறந்து காட்டினேன்.

ஆச்சர்யமாக வாங்கினான். கொஞ்சமாய் எடுத்து நக்கி பார்த்து வாயின் ஓரமாய் ஒதுக்கினான். கண்களை மூடி லயித்தான் ஒரு இசை கலைஞன் போல தலையாட்டினான். பின் கண் திறந்தவன்ஒரிஜினல் சரக்கு........எவ்வளவு வச்சிருக்க சொல்லு ...வாங்கிக்கிறேன்

வெளிநாட்டுல இருந்து ஒருத்தன் சரக்கு கொண்டு வந்திருக்கான். நான் கொஞ்சமா வாங்கினேன். அது ஒரிஜினல் தானான்னு செக் பண்ணத்தான் உன்கிட்ட கொடுத்தேன். உனக்கும் வேணுமின்னா திலக் ஹோட்டல் ரூம் நம்பர் 303 போ என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க துவங்கினேன்.

மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்தேன். ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பார்த்த படத்தையே மீண்டும் தனியே தியேட்டரில் சென்று பார்த்தேன்.

நான் எதிர்பார்த்தது நடந்தது. இரவு 7 மணி லோக்கல் செய்தி சேனலில் 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு ஆசாமி கைது என கிளிப்போர்ட்டை போலிஸ் அழைத்து செல்வதை காட்டினார்கள். பெட்ரோமாக்ஸ் லைட் அடிபாகம் பற்றியோ பச்சை நிற அரிசி பற்றியோ யாரும் கவலை படவில்லை போலும்.

மறுநாள் மீண்டும் கொல்லம்பரப்பு சென்று மீண்டும் ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் அடிபாகம் கழற்றி கொண்டுவந்தேன். பச்சரிசி போட்டு ஊறவைத்து அரிசி பச்சையாக வருகிறதா என பரிசோதித்தேன். பின் பெட்ரோமாக்ஸ் அடிபாகத்தை கழுவி இரவு தெரிந்த பாத்திரக்கடை சென்று காட்டி அந்த பெட்ரோமாக்ஸ் அடிபாகம்ஐம்பொன்னால் ஆனது என தெரிந்து கொண்டேன்.

நள்ளிரவு விடிய விடிய கூகிளில் ஐம்பொன் பற்றி வாசித்தேன். facebook நண்பர் ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் ஒன்றும் தெரியாதது போல ஐம்பொன் பற்றி விசாரிக்கஅட நீங்க வேற தம்பி. ஐம்பொன்னுக்குள்ள எதையாவது வச்சி மறச்சி கொண்டு போனா எந்த டிடெக்டரும் கண்டுபுடிக்க முடியாது. அதுலயும் ஒரு கருப்பு கலர் கார்பன் பேப்பர் சுத்தி உள்ள வச்சிட்டா எந்த கொம்பனாலும் கண்டுபுடிக்க முடியாது என்ற செய்தி கேட்டு சந்தோசமாய் உறங்கி போனேன்.

மறுநாள் கள்ளதனத்திக்கு என்றே வைத்திருக்கும் அடுத்தவன் பெயரில் வாங்கிய சிம் கார்டு போட்ட போனில் அன்று கிளிப்போர்ட் அறையில் போட்டோ எடுத்த விசிட்டிங் கார்டில் இருக்கும் நம்பருக்கு போன் செய்தேன். போன் எடுத்தவன் ஆங்கிலத்தில் பேசவில்லை. இங்கிலீஷ் இங்கிலீஷ் என கத்தியதில் சார்ஜ் செய்த எல்லாம் காசு போச்சு. மீண்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சார்ஜ் செய்துவிட்டு போன் செய்தேன். இப்பொழுது எடுத்தவன் ஆங்கிலத்தில் பேசினான். கிளிப்போர்ட் போலீசில் மாட்டிக்கொண்டான் ஆனால் பொருள் என்னிடம் இருக்கு தரவா என்றேன். எப்படி நம்புவது என்றான் மூன்று பிளாஸ்டில் பாக்கெட்டையும் போட்டோ எடுத்து whats ap பில் அனுப்பினேன். இன்னும் நிறைய கோவாவில் இருக்கு வாங்கி கொண்டுவா என்றான். நிறையகோட்வோர்ட்உபயோகித்து கோவா சென்று இன்னும் வெள்ளை வெள்ளையாய் வாங்கி கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

நான்கு ஐந்து உரையாடலுக்கு பின் என்னை அந்த தாய்லாந்துக்காரன் நம்பினான். என் புது வங்கி கணக்கிற்கு பதினைந்து லட்சம் பணம் அனுப்பினான் கூடவே விசிட்டிங் விசாவும் வர ரெண்டு பெட்ரோமாக்ஸ் லைட் முழுக்க போதைப்பொருளை சுமந்து கொண்டு மேலே அதற்கு ஏற்றார் போல ஒரு பெண் சிலையை இணைத்து எந்த பயமும் இன்றி தாய்லாந்து சென்று பொருளை ஒப்படைத்துவிட்டு கோடிக்கணக்கான தொகை என் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட பெட்ரோமாக்ஸ் லைட் என் வாழ்வின் முக்கிய நண்பன் ஆனது.

கிளிப்போர்ட் வெளியே வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் பணத்தால் செய்து முடித்தேன்.

கோயிலில் இருந்த 12 பெட்ரோமாக்ஸ் லைட்டையும் எடுத்துவிட்டு 12 லட்ச ரூபாய்க்கு கோயிலை சுற்றி நியான் விளக்குகள் பதித்தேன். கால் ஒடிந்த குதிரையுடன் கூடிய கோயில் சப்பரத்தை புதுப்பித்தேன். சாமி குத்தம் ஆயிரகூடாது இல்லையா. என்ன நான் சொல்லுறது சரி தானே.

இதோ ஒரு புது திடீர் பணக்காரன் கையில் இருந்து பணம் கொட்டோகொட்டு என கொட்டுகிறது என்றால் அது நிச்சயமாய் உழைத்த காசாக இருக்காது என்பது நினைவில் இருந்தால் போதும்.


No comments:

Post a Comment