Saturday 26 July 2014

Story 83: வீழ்ந்த மரத்தில் வாழும் பறவை



 வீழ்ந்த மரத்தில் வாழும் பறவை


முதலாளி பைக்கை நிறுத்தி விட்டு வெளித் திண்ணையையும் வாசற்படியையும் நோட்டமிட்டார். என் கணவரின் சைக்கிளும் செருப்பும் அவர் கண்களில் படவில்லை என்றவுடன் என்னை கோபமாக ஏறிட்டார். 


"புருஷனும் பொண்டாட்டியும் என்ன நினைச்சிருக்கீங்க? எங்க உன்ற ஊட்டுகாரன்?" 

"பட்டறைக்கு போச்சுங்க "

"நாடகமா ஆடுறீங்க? ஒனத்திப் பொச்சா மும்பணம் மட்டும் வாங்கித் தின்னீங்கள்ல..அந்த புத்தி கொடுக்கும் போதும் இருக்கணும்.."

முதலாளி கோபம் தணியாமல் பைக்கை உதைத்துத் திருப்பினார். நான் வாசற்படி மீதே உட்கார்ந்து கொண்டேன். அவர் போன கொஞ்ச நேரத்தில் என் வீட்டுக்காரர் சைக்கிளை வெளித் திண்ணையில் சாத்திவிட்டு எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய் பாயை விரித்துப் போட்டு படுத்துக் கொண்டார். பயம் எழுந்து உடல் நடுங்கியது. அன்று சாயங்காலமே பவானி ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் சண்முகம் வீட்டுக்கு வந்து நான் கிளம்ப வேண்டிய நாளை தெரிவித்து விட்டுப் போனான். மூன்று தினங்கள் கழித்து பழைய பாலத்தின் அருகே நாங்கள் இருவரும் காத்திருந்தோம். தாமதமாக வந்த சண்முகம் "மேச்சேரியிலிருந்தும் ஒரு பொம்பள வருது. அவள கூட்டாளியோட பஸ்ல ஏத்தி உட்டுட்டு வாரேன். அதான் லேட்டு" என்றான். காற்று குளிரோடு வீசியது. கோபுர தாழ்வாரத்தில் பதுங்கிய புறாக்கள் அணத்திக்கொண்டிருந்தன. "நான் வார வரைக்கும் கொழந்தீகள ஜாக்கரதையா பாத்துக்கோங்க.. மொதலாளிகிட்ட போய் சண்ட கட்டிக்காதீங்க.." என்றேன். வீட்டுக்காரர் பதில் பேசவில்லை. நான் பேருந்தில் ஏறிய பின்பு சன்னல் வழியாக குனிந்து வீட்டுக்காரரைப் பார்த்தேன். அவர் முகம் சோர்ந்து பார்வை துக்கம் தோய்ந்ததாய் இருந்தது.

பவானி பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் சண்முகம் ஒரு ரூபாய் நாணயம் போட்டு யாருடனோ தொலைபேசியில் பேசினான். பின்பு அவசரமாக சேலம் பேருந்தில் ஏற்றி இருக்கையில் அமர்ந்தவுடன் என் தோளில் கை போட்டான். இரவு முழுக்க ஏதேதோ பேசியபடி வந்தான். பொழுது விடிந்து ஓசூர் பேருந்து நிலையத்தில் இறங்கி பெங்களூர் சாலையில் கூட்டிப் போனான். தொலைவில் மலைக் குன்றுகள் தெரிந்தன. நெரிசலான தெருக்களின் ஊடே முக்கால் மைல் தூரம் நடந்தபின் கசாப்புக் கடைகள் வரிசையாக இருந்த கட்டிடத்தின் குறுகிய படிக்கட்டில் ஏறினான். இரண்டாவது தளத்தை அடைந்ததும் "நீ இங்கனயே நில்லு. நான் போயீ சாவி வாங்கியாறேன்" என்றான். அந்த வராண்டா இருள் நிரம்பியதாக இருந்தது.கீழே ஆட்டோ போகும் சப்தம் கேட்டது. 'மேச்சேரியில் இருந்து ஒரு பொம்பள வர்றதா சொன்னியே அது எங்க?' என்று கேட்க நினைத்து அதை தொண்டையிலேயே அடக்கினேன். அங்கு நடந்து கொண்டிருந்த ஆண்கள் என்னை சந்தேகமாக பார்த்தார்கள். திடீரென்று வராண்டா விளக்கு பளிச்சிட்டது. அப்போது தான் அங்கே உதட்டுச் சாயம் பூசிய பெண்ணொருத்தி நின்று கொண்டிருப்பதை கவனித்தேன். என்னை திரும்பிப் பார்த்து சிரித்தாள்.

சுவரில் மூட்டைப் பூச்சியை நசுக்கிய ரத்தக் கறைகள் தென்பட்டன. சண்முகம் சாப்பாடு பார்சல்கள் வாங்கி வந்திருந்தான். "உள்ளார போ" என்றான். அறையில் மின்விசிறி மிக மெதுவாக பெரும் சப்தத்துடன் சுழன்றது. பார்சல்களை அவசர அவசரமாக பிரித்து அவுக் அவுக் என்று அவன் சாப்பிட்ட போது கடைவாயில் ஒழுகியது. நான் முதல் கவளம் வாயில் போட்டவுடன் விக்கல் எடுத்தது. "என்ன  உம்புருசன் நெனச்சுக்கிட்டானா? எனக் கேட்டான். நான் பதில் ஏதும் பேசாமல் தண்ணீர் குடித்து சாப்பிட்டு விட்டு குளியல் அறைக்குச் சென்று குழாயை திறந்தேன். வெதுவெதுப்பான தூசிகளுடன் தண்ணீர் வந்தது. முகம் கழுவி விட்டு வெளியே வந்தால் பீடி பிடித்துக் கொண்டிருந்த சண்முகம் பீடித் துண்டை மூலையில் எறிந்து விட்டு சட்டென என் கையைப் பிடித்து இழுத்தான். நான் தடுமாறி அவன் மேலேயே சாய்ந்தேன். பின்பு திமிறி விடுவித்துக் கொண்டு "கூடப் பொறந்த அண்ணனா நெனச்சுத் தான் இவ்ளோ தூரம் உங்கூட வந்தேன்" என்றேன். அவன் எதுவும் பேசாமல் என்னையே உற்றுப் பார்த்து நெருங்கி வந்து தாழ்ந்த குரலில் "இது பிராத்தல் பொழங்கற எடம் தெரியுமா? நா ஒரு பேச்சு சொன்னா போதும்.போலீஸ் வந்து உன்ன புடிச்சிடும். அப்புறம் நீ வாழ்நாள்ல உன்ர புருசனையும் கொழந்தைகளையும் பாக்கவே முடியாது" என்றான்.

எனக்கு இயலாமையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவன் விலகிப் போய் கட்டிலில் அமர்ந்து கொண்டு மீண்டும் ஒரு பீடியை பற்ற வைத்தான். புகையை விட்டுக் கொண்டு என்னையே வெறித்துப் பார்த்தான். ஆவேசமாக எழுந்து வந்து அணைத்துக் கொண்டான். அவன் பிடி இறுகியது. தெருவில் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும் குரைப்பு ஒலி கேட்க ஒரு பெண் யாருடனோ பேசியபடி நடந்து போவதை உணர்ந்தேன். கீழே கடை ஒன்றின் சட்டர் இழுத்து விடப்படும் ஓசை கேட்டது. மறுநாள் காலையில் நான் விழித்த போது என் ஆடைகள் எல்லாம் தரையில் கிடந்தன. சட்டென எழுந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். என்னால் நிர்வாணத்தை தாங்க முடியவில்லை. முதுகு எழுந்து அமிழ்ந்து கொண்டிருந்தது. கழுத்து, கன்னம், மோவாய் எல்லாம் கன்றிப் போயிருந்தன. கண்களில் தானாக கண்ணீர் சுரந்து கேவலாய் வெளிப்பட்டது. சண்முகம் உறக்கம் கலைந்து "எப்படியும் நாளைக்கு டாக்டர் போன் பண்ணவுடனே நாம கெளம்பப் போறோம். இதுக்குப் போய் என்னத்துக்கு அழற?" என்றான். நான் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவன் எதைப் பற்றியும் கவலைப்படாதவன் போல இருந்தான். பீடியை பற்ற வைத்து உட்கார்ந்தபடியே கையை நீட்டி சன்னலை திறந்தான். வெயில் இறங்காத வெளிச்சத்தில் ஊர் தெரிந்தது. ஆகாசத்தில் வெண் முகில்கள் திட்டுத் திட்டாக நகர்ந்து கொண்டிருந்தன. அடுத்த இரண்டு நாட்களுக்கும் கீழே இறங்கிப் போய் உணவு வாங்கி வரும் நேரங்களைத் தவிர கதவை சாத்தியே வைத்திருந்தான். என்னால் மறுப்பே தெரிவிக்க முடியவில்லை. அவனின் கழுத்து வியர்வை, கிச்ச நாற்றம், விஸ்கி நெடி எல்லாம் என் உடலாகி விட்டிருந்தது. அவனுக்கு உணர்ச்சிகள் ஓயவேயில்லை. வெறிபிடித்தவன் போல செயல்பட்டான்.

மூன்றாவது நாள் மதியம் அறையை காலி செய்தோம். கீழ் தளத்திற்கு வந்த போது கசாப்பு கடைகாரர்கள் வெறுமனே உட்கார்ந்து தெருவை பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். கறியெல்லாம் விற்றுப் போயிருந்தன. சந்துகளில் வெயில் நேராக இறங்கி சுவற்று நிழல்கள் எல்லாம் ஒடுங்கிப் போயிருந்தன. பேருந்து நிலையத்தில் சர்பத் வாங்கிக் கொடுத்தான். பெங்களூரு வந்திறங்கியவுடன் ஆட்டோ பிடித்து வேறு இடத்திற்கு கூட்டிப் போனான். காற்று குளிராய் வீசியது. எந்த திசையில் போகிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. ஆட்டோவிலிருந்து இறங்கியவுடன் அது ஒரு தனியார் மருத்துவமனை எனப் புரிந்தது. என்னை வரவேற்பறையில் உட்கார வைத்துவிட்டு சண்முகம் மட்டும் உள்ளே போய் அரை மணி நேரத்தில் திரும்பி வந்தான். "ஒடனே ஆபரேசன் பண்ணுனா வெறும் இருவத்து அஞ்சுதான் கொடுப்பாங்கன்னு சந்திரன் சொல்றாரு. வேற பார்ட்டி பாத்தமனா நாப்பது கெடைக்கும். நீ என்ன சொல்ற?" எனக் கேட்டான். இவன் சொல்வது எதுவும் எனக்குப் புரியவில்லை. சிறிது நேரம் கழித்து சந்திரன் என்பவர் வந்து என்னை வேறு இடத்திற்கு கூட்டிப் போனார். சில அடுக்குமாடி குடியிருப்புகள் தெரிந்தன. என்னை நான்காவது மாடியில் தங்க வைத்தார்கள். இனம் புரியாத கிலேசம் மனதை கவ்வி இருந்தது. சண்முகம் மது அருந்தி விட்டு கைலி விலகியிருக்க முன் அறையின் தரையிலேயே படுத்துவிட்டான். நான் கண்ணாடி சன்னலை சாத்திவிட்டு கட்டிலில் படுத்துக் கொண்டேன். குளிர் அடித்தது.

நடுநிசியில் சந்திரன் என் அறைக்கு வந்தார். நான் உறங்குவது போல பாவனை செய்தேன். கதவை சாத்தி தாளிடும் சப்தம் கேட்டது. என்னருகே வந்து என் தோளை உலுக்கி கன்னடத்தில் ஏதோ சொன்னார். சந்திரனுக்கு மூச்சு முட்டியது. இவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு எந்த வழியுமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த முறை நான் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. சண்முகத்தை போல இவனிடம் துர்நாற்றம் எதுவும் வீசவில்லை என்பதே ஆசுவாசமாக இருந்தது.அவனைப் போன்ற முரட்டு வெறியில்லை. நானும் உடம்பில் உஷ்ணத்தை உணர ஆரம்பித்தேன். தீராக் கஷ்டமாகத் தோன்றியது. மறுபடியும் விடியக் காலையில் வந்து இறுக்கி அணைத்தான். உடம்பு வலியோடு எரிந்தது. பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன். என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அவன் அறையை விட்டு வெளியேறினான். மதியம் வரை நான் எழுந்திருக்கவே இல்லை. உணவு எதுவும் உட்கொள்ளவில்லை. இருட்டியதும் வேறு இரு புதிய நபர்களை அழைத்து வந்தான்.நான் ஒத்துழைக்க மறுத்த போதும் அவர்கள் விடவில்லை. அதற்கு அடுத்த தினமும் இதே போலத்தான் கழிந்தது. ஆட்கள் மாறியிருந்தார்கள். 

உடம்பு துவண்டு போய்விட்டது. முந்தைய இரவுகளின் கோரமான சித்திரம் மனசுக்குள் நிரம்பி அலைக்கழித்தபடி இருந்தது. சன்னலை திறந்து தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றியது. மறுநாள் சந்திரன் மட்டும் வந்து உடனே கிளம்பச் சொன்னான். குளிக்கும் போது கண்ணீர்முட்டி அழுகை வந்தது. மார்புகள் வீங்கியிருந்தன. அந்த தனியார் மருத்துவமனைக்கு போன போது எனக்கு இரத்த பரிசோதனை ஸ்கேன் எல்லாம் எடுத்தார்கள். அங்கிருந்து என்னை சந்திரன் மற்றொரு அறைக்கு அழைத்துப் போனான். அங்கே க்ளுகோஸ் இறங்கியபடி ஓர் இளம்பெண் படுத்திருந்தாள். அவர்களிடம் சந்திரன் என்னை சுட்டிக் காட்டி கன்னடத்தில் ஏதோ சொன்னான். நான் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவள் என்னை நோக்கி கை கூப்பி வணங்கினாள். நர்ஸ் ஒருத்தி வந்து என்னை இன்னொரு அறைக்கு அழைத்துப் போனாள். சாயங்காலம் வாக்கில் எனக்கு வேறு உடை அணிவித்தார்கள். மயக்கமாக இருந்தது.

ஆறு தினங்கள் கழித்து ஒரு பகல் பொழுதில் என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். நடக்கத் திராணியில்லை. இடதுபக்க அடிவயிற்றில் இரு கோடுகள் தையல் பிரித்த தழும்புகளாகி வெடித்துக் கிடந்தன. சேலையை எப்படி இழுத்து விட்டும் மறைக்கவே முடியவில்லை. இந்த முறை பேருந்து நிலையத்திற்கு சண்முகம் கூட வரவில்லை. சேலத்திற்கு பஸ் டிக்கெட் டுத்துக் கொடுத்து "பணம் பத்திரம்" என்று சொல்லி ஆட்டோவில் மட்டும் ஏற்றி விட்டான். இடுப்பு வலித்து உட்காரவே முடியவில்லை. எண்ணங்கள் தாறுமாறாக எழுந்தன. அடிக்கடி கண்களை நீர்க்கட்டி மறைத்தது. பேருந்தில் தூங்கவும் வழியில்லாமல் பணம் பயமுறுத்திற்று. அந்தி நேரத்தில் ஊர் திரும்பியபோது வயிறு எரிந்தது. வீடு பூட்டிக் கிடந்தது. வெளித் திண்ணையில் பையை தலைமாட்டில் வைத்து விட்டு படுத்துவிட்டேன். விழித்துப் பார்த்த போது கணவனும் குழந்தைகளும் கால்மாட்டில் நின்று கொண்டிருந்தார்கள். என் வீட்டுக்காரர் பையை வாங்கி பணக்கட்டை எண்ணிப் பார்த்து ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் போனான். சண்டாளன்.

 மூன்று மாதங்கள் ஓடி விட்டன. உடம்பு இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. தெம்பை எல்லாம் யாரோ பிடுங்கிவிட்டது போல வலித்தது. குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன. திடீரென்று எழுந்து உட்கார்ந்த வீட்டுக்காரன் என்னை நெருங்கி வந்து அணைத்தான். பெங்களூரில் நடந்ததெல்லாம் ஒரு கணம் நெஞ்சில் நிழலாடியது. விலக்கிவிட்டு நகர்ந்து படுத்துக் கொண்டேன். அடுத்த நாள் மறுபடியும் நெருங்கி வந்து படுத்து இடுப்பில் கை வைத்து சேலையை விலக்கினான். இடுப்புத் தழும்புகளையே யோசனையாய் பார்த்துக் கொண்டிருந்தவன் பெருமூச்சு விட்டபடி நகர்ந்து போய் விட்டான். காரமழை சடசடத்து இறங்கியது. கூரையில் மழைத்துளிகள் சிதறி விழும் ஓசை கேட்டது. திடீரென மின்சாரம் அறுந்து போய் விட்டது. நான் எழுந்து அரிக்கேன் விளக்கைப் பற்ற வைத்தேன். வீட்டுக்காரனின் படுத்த கோலம் நிழலாய் சுவரில் படிந்து விஸ்வரூபமாய் தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் வீட்டுக்காரன் மீண்டும் பெருமூச்சு விட்டபடி உறங்கிப் போனான். எனக்கு அழுகை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டது. மழையின் வேகம் இரவு முழுவதும் தணியவே இல்லை. மறுநாள் காலையில் ஈரம் படிந்த வீதியில் சருகுகள் உதிர்ந்து கிடந்தன. என்னோடு எதுவும் பேசாமல் வீட்டுக்காரன் அவசர அவசரமாக கிளம்பிப் போனான். எனக்கு மனசெல்லாம் கனத்துப் போனது. மேலும் இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் என் வீட்டுக்காரன் தறிப்பட்டறையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணோடு சுற்றுவதாக சேதி வந்தது. முதலில் நான் நம்பவில்லை. ஒரு நாள் நானே நேரில் பார்த்தேன். அன்றிரவு அது குறித்து கேட்டபோது என்னை முறைத்துப் பார்த்துவிட்டு வினயமாக "நீ மட்டும் யோக்கியமா?" எனத் திருப்பிக் கேட்டான். குழந்தைகள் இருந்ததால் நான் எதுவும் பேசவில்லை. மறுநாள் அவன் வீட்டுக்கு வரவில்லை. அவன் வேலை பார்க்கும் பட்டறைக்குச் சென்று அங்கிருந்தவளிடம் "என்ர புருஷன் இங்கன வந்துச்சா?" எனக் கேட்டேன். "அவுக ரெண்டு பெரும் கலியாணம் மூச்சுக்கிட்டாங்க...ஒனக்குத் தெரியாதா?' என்று அவள் என்னைத் திருப்பிக் கேட்டாள்.

காற்று அடங்கி வீதி சப்தமற்று இருந்தது. வெயில் தாழ்ந்திருந்தது. நான் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. நான் விரைசலாக உள்ளே நுழைந்து பார்த்தால் இரும்புப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. எனது தோடும் மூக்குத்தியும் காணவில்லை. இயலாமையால் கோபமும் அழுகையும் அவமானத்தால் நெஞ்சும் ஒரு சேர வெடித்தது. குழந்தைகள் பள்ளிவிட்டு வீடு வந்ததும் அவர்களை கட்டிக் கொண்டு அழுதேன். ஆத்திரமாக வந்தது. "என்ர கிட்னிய வித்து கடன அடைச்சுப் போட்டு பவிசா ஓடிப் போயிட்டானே பாவி" என்கிற நினைப்பு எழும் போதெல்லாம் அவனை கொலை செய்துவிடலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து ஆற்றங்கரை வரைக்கும் சென்றுவிட்டேன். ஆனால் பெரு வெள்ளம் சுழித்தோடும் ஆற்றைக் கண்டு பயமாக இருந்தது. திரும்பி வீட்டுக்கு வந்து விட்டேன். வீட்டுக்காரன் நினைப்பு எழும் போதெல்லாம் மனசுக்குள் வன்மம் உருக்கொண்டு சுழன்றது. எப்படியாவது வாழ வேண்டுமென்ற வெறி உண்டானது. காற்றுக்கால சாமத்தில் இப்போதெல்லாம் உறக்கமே வருவதில்லை. காற்று வீதியில் வெறுமனே அலைவுறும் ஓசையை உன்னிப்பாக கேட்டபடியே படுத்துக்கிடப்பேன். கோட்டானின் குரலும் பூனையின் மியாவ்வும் எப்போதாவது கேட்டன. கையில் நயா பைசா இல்லை. எதிர்காலம் பயமுறுத்தியது. வேறொரு தறிப்பட்டறை ஒன்றிற்கு வேலைக்குப் போக ஆரம்பித்தேன். தார்போடும் வேலைதான். அங்கு மொத்தம் ஆறு தறிகள் இருந்தன. அவை எல்லாவற்றையும் ஒத்தை ஆளாக குமார் ஓட்டிக் காட்டுவான். குமார் என் வீட்டுக்காரர் சாயலில் இருந்தான். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தருணத்தில் வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். நான் வெறுப்பாகவே பதில் சொல்லி வந்தேன். அதன் பின்னான நாட்களில் எப்போதாவது தான் வீட்டுக்காரன் நினைப்பே எனக்கு வந்தது. 
 

அந்த வாரம் நெய்து கொண்டிருந்த நூலின் ரகம் சரியில்லை. பாவு அடிக்கடி இழை வாங்கியது. குமாருக்கு ஒத்திசைவாக நான் இழை எடுத்துக் கொடுக்கப் போனேன். அப்போது சடாரென ஒரு சப்தம். தறியின் இடைவெளியில் உட்கார்ந்து குமார் அலறிக் கொண்டிருந்தான். ஓடிப் போய் "என்னாச்சு?" என்றேன். "அடி வவுத்துல பட்டுடுச்சு" என்றபடி சட்டையை தூக்கி அடிவயிற்றை தேய்த்தான். குமாரின் வயிற்றிலும் என்னைப் போலவே இரண்டு கோடுகள் இருப்பதைக் கண்டேன். ஒரு கணம் உடம்பு அதிர்ந்து அவனருகே அமர்ந்தேன். "நானும் ஒன்னப் போலத் தான்.." என்றான். இல்லை, என்னுடம்பு உருக்குலைந்ததை போல உனக்கு நேர்ந்திருக்காது என்று நினைத்துக் கொண்டேன். நான் எழுந்து போய் துணியை நனைத்து வந்து சுருட்டி ஒத்தடம் கொடுத்தேன். விசைத்தறி ஓடும் சப்தத்தில் வெளி அமுங்கிக் கிடந்தது. பட்டறைக்குள் வேறு ஆட்கள் இல்லை. "எனக்கு மூணு கொழந்தைங்க.. பெரிய பொண்ணு எட்டாப்பு படிக்கு " என்றவன் திடீரென்று  "நாம கலியாணம் மூச்சுக்குவமா?" எனக் கேட்டான். நான் பதில் சொல்லாமல் எழுந்துகொண்டு விட்டேன். அதற்குப் பின்னிட்ட நாட்களில் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. எதிரில் சந்திக்கும்படி நேர்ந்த போது கூட நான் தலையை தாழ்த்தியபடி நடந்து போய்க்கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த இரவில் யாரோ நடு சாமத்தில் கதவை ஓங்கி மிதித்துக் கொண்டே இருந்தார்கள். "கதவை  தெறடி... அவுசாரி நாயே... கதவை தெறடி. என்ர கூடயும்  'கெடந்தா' கொறஞ்சா போய்டுவ?" என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தான். மூத்தவள் பயந்து போய் எழுந்து விட்டவள் அதற்குப் பிறகு உறங்கவே இல்லை. தாழ்நீக்கி வெளியே யாரென்று எட்டிப்பார்க்கலாமா என யோசித்து அதை உடனே அழித்தேன். கதவை திறக்காமலேயே தூக்கம் கலைந்து விடியவிடிய விழித்திருந்தேன். அந்த வருடம் ஆவணியின் இறுதியில் ஆற்றில் மூன்று முறைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ளத்தில் கூடுதுறை படிக்கட்டு மூழ்கிப் போனது. குளிர்காற்று உள்வீடு வரை ஊடுருவி ஆளை நடுங்கச் செய்து கொண்டிருந்தது. மற்றொரு நாள் மழை பெய்து ஓய்ந்திருந்த வைகறை பொழுதில் திரும்பவும் கதவு தட்டப்பட்டது. சீமையோட்டு இடுக்கின் வழியே கண் வைத்துப் பார்த்தேன். விடியல் ஒளி மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. "ஆரது?" எனக் கேட்டேன். "நாந்தான் குமாரு". எனக்கு பக்கென்றது. சட்டென்று கதவைத் திறந்து "உள்ளார வா" என்றேன். ஆனால் குமாரு வெளித் திண்ணையிலேயே அமர்ந்தவன் முகத்தை மூடி அழத் துவங்கினான். கூரைத் தண்ணீர் அவன் தலை மீது சொட்டியபடியே இருந்தது. எனக்கு எதுவும் புரியவில்லை. மறுபடியும் "எதுக்கு இப்படி அழற ? மொதல்ல உள்ளார வா " எனக் கூப்பிட்டேன். "மூத்தது சமஞ்சிருச்சு...அந்த ஓடுகாலி முண்ட எதப்பத்தியும் யோசிக்காம ஓடிப்போயிட்டா.. இப்ப எனக்கு என்ன பண்றதுன்னே வெளங்கல " என்றான். நான் குழந்தைகளிடம் சொல்லிவிட்டு அவனுடன் வேகமாக நடந்தேன். முதலாளி இருபதாயிரம் கடன் கொடுத்ததாக சொன்னான். வீதியில் சாக்கடை உடைந்து மழை நீரோடு ஓடிக் கொண்டிருந்தது. பழைய பாலத்தில் நடந்து கொண்டிருந்த போது எதிர்ப்பட்ட சண்முகம் என்னைப் பார்த்துச் சிரித்தான். நான் அவனைப் பார்க்காதவள் போல கடந்து போனேன் . நாட்கள் வேகமாக நகர்ந்தன. 

அடிவானம் கருக்கல் கட்டி வந்தது. நான் தார் போட்டுக் கொண்டிருந்தேன். எனது மூத்த மகளும் வேலைக்கு வர ஆரம்பித்து விட்டாள். குமார் தறியை நிறுத்திவிட்டு உருளைக்கெல்லாம் ஆயில் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது நோட்டமிட்டு வந்த முதலாளியிடம் குமார் "ஊர்ல பொங்கல் சாத்தியிருக்குங்க..நா போகலாமுன்னு இருக்கேங்க" என்றான். முதலாளி என்னையும் அவனையும் மாறி மாறி பார்த்தார். "போயிட்டு எப்ப வருவ?" என்றார். "பொதன் கெழம போயிட்டு சனிக் கெழம வந்துருவனுங்க" என்றான்.

ஆராறு போறீங்க?

நானும் மூத்த பொண்ணும் 

போயிட்டு திரும்ப வருவீங்களா?

"என்ன இப்படி கேக்குறீங்க?" என்றவன் என்னை சுட்டிக் காட்டி "இவளும் எங்க கொழந்தைகளும் இங்கன தான் இருப்பாங்க" என்றான். "ம்கும் கட்டின பொண்டாட்டி பெத்த புள்ளைகளை எல்லாம் உட்டுட்டு ஓடிறாங்க.. இவளெல்லாம் எம்மாத்திரம்... உனக்கு கடன் வேற இருக்கு..அடச்சுட்டு எங்கன வேணா போ" என்றார். பின்னர் எல்லோரையும் பொதுவாகப் பார்த்து "இந்த வாரம் கரண்ட் பில் வாரம்ப்போய்... பணம்லாம் ஆருக்கும் ஆகாது" என சொல்லிவிட்டு முதலாளி கோபமாக கிளம்பிப் போனார். தார்போடும் பெண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நான் தலையை தாழ்த்திக் கொண்டேன். கண்ணீர் எட்டிப் பார்த்தது. இரவு வெகு நேரத்திற்குப் பிறகு குமார் வீட்டுக்கு வந்தான். அவன் சரக்கு அடித்திருப்பதைக் கண்டு ஆத்திரமாக வந்தது. அடுப்படிக்கு கூட்டிப் போய் வட்டலில் சாதத்தைப் போட்டதும் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தவன் நினைவு வந்தவன் போல என்னிடம் கேட்டான். "ஏம்புள்ள நம்மல்ல ஆராச்சும் ஒருத்தருக்கு கிட்னி இருந்திருந்தாக் கூட அந்த நாயி மொகரையில காச விட்டெறிஞ்சிருக்கலாம்ல ..." எனக்கு நெஞ்சுக்குள் ஒரு கூடை தீ விழுந்தது போல இருந்தது. சிறிது நேரம் குமாரையே உற்றுப் பார்த்தேன். ஓங்காரமிட்டு அழத் துவங்கினேன். வீதியில் நாயின் குரைப்பொலி கேட்டது. முச்சந்தி அரச மரத்தை காற்று உலுக்கி எடுக்கும் சலசலப்பு கேட்டது. அங்கு வாழ்ந்திருந்த அக்கக்காக் குருவிகள் பெரும் முறைச்சலுடன் மழைத்துளிகளினூடே சுழன்றடித்தபடி புது வெள்ளம் நோக்கி ஆரவாரக் குதூகலத்துடன் பறந்தன.

No comments:

Post a Comment