Monday 28 July 2014

Story 99: செத்து போய்ட்டேண்ணே.




செத்து போய்ட்டேண்ணே.
நேத்திக்கு.
சாயங்காலம் ஒரு  எட்டு மணி  இருக்கும்.  நான் ஒரு இத்து போன பைக்ல சத்யா ஸ்டுடியோ தாண்டி போய்கிட்டு இருக்கேன். திடீர்னு பஸ்காரன் இடிச்சான்.  நம்பரு பாக்கல.  பின்னாடி இருந்துல்ல வந்தான்.
ஸ்பாட்லயே காலி.

நாயி, கைல கால்ல அடிச்சுருக்கலாம். தலைல பலமா அடி.  கண்ணுல என்னமோ குத்துச்சு. எப்படியும் எந்திரிச்சு நடந்துரலாம்னு தான் நெனச்சேன். முடியல.
ரெண்டு மணி நேரம் புல் ட்ராபிக் ஜாம். டிரைவர் உடனே வந்து பாத்தான்.  என்னமோ நினைச்சான்,  ஏதாச்சும் சொல்லனும்னு நினச்சானானு தெரியல. ரெண்டு மூணு போலீஸ் வந்துச்சு. அதுல ஒரு போலீஸ் காரன் என்  பர்ஸ் எடுத்து வீட்டுக்கு போன் பண்ண மாதிரி தெரிஞ்சது.  அப்புறம் 108 வந்துச்சு. ராயப்பேட்டை தூக்கிட்டு போனாங்க.  ஏற்கெனவே அடி பட்டு செத்தாலும், இன்னும் அப்படியே வலிக்குது.. ராயப்பேட்டைல என்ன பண்ணுவானுங்கன்னு பயம். கிட்னீய தூக்கிருவானுங்களா, கண்ண நோண்டுவானுங்களானு. நல்ல வேளை, லேட் ஆயிருச்சா அப்படியே ஒரு துணிய சுத்தி அனுப்பிட்டானுங்க.

இப்போ மணி என்னாச்சு ?  காலைல பதினொரு  மணி இருக்குமா ? ராயப்பேட்டைல கைல இருந்த வாட்ச்சை கழட்டிட்டானுங்க. டைம் தெரியல.

மாசா மாசம் மாசக்கடைசி  வருது. சம்பாதிக்கறவனுக்குத் தான் தெரியும் அதோட கொடுமை. 
நல்ல வேளை போன வாரம் ஸ்கூல் பீஸ் கட்டியாச்சு. இந்த மாச வாடகை கட்டியாச்சு. மளிகை கடை காரன் கணக்கு ஐநூறு ரூபா போக பாக்கி செட்டில் பண்ணியாச்சு. பால் கார்டு இன்னும் பதினைஞ்சு நாளு இருக்கு. போன வாரம் உமாகிட்ட ஒரு ரெண்டாயிரம் வேற குடுத்துருக்கேன்.

உமாக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி ஒரு பதினைஞ்சு வருஷம் இருக்கும். ஆனா அதுக்கு முன்னாடியே எனக்கு அவளைத் தெரியும்.  பெருசா லவ்வுலாம் ஒண்ணுமில்லை.  ஆனா அப்பவே பிடிக்கும்.  ஒரே தெரு. அவ அண்ணனும் நானும்  ஒரே செட். அவங்க வீட்டுக்குப் போறப்ப எல்லாம் பாத்துக்குவோம். ஒரு மாதிரி பிரியமும்னும் சொல்லலாம், லவ்வுனும் சொல்லலாம், ரெண்டுக்கும் நடுவுல ஒரு சிரிப்பு சிரிப்போம். திடீர்னு வீட்ல கேட்டப்போ உடனே சரின்னு சொல்லிட்டேன்.

கல்யாணத்துக்கு அப்புறம் எதுவுமே எங்களுக்குள்ளே ஓவரா தான் நடக்கும்.  அவ கத்தினாலும் ஊரே அலறும்.  நான் கத்துனாலும் அப்படி தான்.  ஆனா எவ்வளவு சண்டை போட்டாலும், ரெண்டு மணி நேரம் தான். என்னிக்கு சண்டை போட்டு சமாதானம் ஆனாலும் அன்னிக்கு நைட் படுத்து எந்திரிச்சுருவோம். அதே மாதிரி அவ என்னிக்கு அழுதாலும் சரி. அப்பப்ப ரெண்டு பேருக்கும் டவுட் வரும்., சண்டை போடறதே இதுக்குத் தானோன்னு.

பையனும் ரொம்ப க்ளோஸ். போன வருஷம் வரை. அது என்னவோ தெரியல, இந்த பசங்களுக்கு என்ன நெனப்புன்னும் புரியல, மீசை லைட்டா வந்தாலும், அப்பன் கிட்ட இருந்தும் லைட்டா ஒதுங்கிடுறானுங்க.

உமா ஒரு ஏழெட்டு மணி நேரம் அழுதிருப்பா.  இப்போ அப்படியே படுத்துருக்கா.  அவ கிட்டப் போய் உக்காந்து எப்பயும் போல அவ கைய பிடிக்கணும் போல இருக்கு. இன்னிக்கு நைட் என்ன பண்ண முடியும்னு தெரியல. உமா தாலி செயின் அந்து போச்சுன்னு ரெண்டு மாசம் முன்னாடியே சொன்னா.  இருடி ஸ்கூல் பீஸ்லாம் கட்டுனதுக்கு அப்புறம் பாக்கலாம்னு சொல்லிருந்தேன். இந்த மாசம் இன்னும் பீரியட்ஸ் வரலன்னு ரெண்டு நாளைக்கு முன்ன சொன்னா. அப்புறம் நான் எதுவும் கேக்கல.


பையன் வந்தான்.  பாத்தான்.  அப்படியே உக்காந்துருக்கான். என்ன நெனச்சுட்டு இருக்கான்னு தெரியல. டேய் படிச்சுருடா, அப்பனை மாதிரி அரைகுறையா படிச்சு கஷ்டப்படாதடா, நல்லா படிச்சுருப்பா னு சொல்லணும். ஒரே பையன். அதுனால ரொம்ப செல்லம்.  அவன் அழுது நாங்க ரெண்டு பேரும் பாத்ததே இல்ல.
எங்கப்பா ஒரு ஓரமா அந்த ஸ்டீல் சேர்ல உக்காந்துருக்காரு.  அம்மா செத்ததுக்கு அப்புறம் அவரு ரொம்ப தெவங்கிட்டாரு. லீவுக்கு பேரனை அனுப்பி வைடான்னாரு.  அனுப்பல, நானும் போவல. அம்மா செத்ததுக்கு அப்புறம் என்னவோ போணும்னு தோணவே இல்ல. தெவசத்துக்குப் போறதா இருந்தோம்.

உமா அப்பா இன்னும் ரெண்டு பெருசு சாயங்காலம் அஞ்சு மணிக்கு எடுத்துருவோம்னு பேசிட்டு இருக்காங்க.

இப்போ மணி நாலு தான் ஆச்சு. டெய்லி ஆபிஸ் முடிஞ்சு ஆறு மணிக்கு மேல தான் டாஸ்மாக் போவேன். இவனுங்களுக்குத் தெரியாது.  இன்னிக்கு என்ன பண்றதுன்னு தெரியல.

என்னண்ணே பண்றது.?

No comments:

Post a Comment